ஈரானின் சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா குண்டுவீச்சு; இந்தியாவின் ₹1,000 கோடிக் கனவுத் திட்டம் சிதறுகிறதா?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு போரின் ஒரு பகுதியாக, ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள மிக முக்கியமான சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைத் தவிர்க்கவும், பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்கவும் இந்தியா கடந்த இரு தசாப்தங்களாக பார்த்துப் பார்த்து செதுக்கிய ஒரு மூலோபாயக் கனவுத் திட்டத்தின் மீதே இந்தத் தாக்குதல் தற்பொழுது நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய கள நிலவரப்படி இந்தியா எடுத்துள்ள சில ராஜதந்திர நகர்வுகள் காரணமாக, இந்த தாக்குதலால் இந்தியாவிற்கு உடனடி பொருளாதார இழப்புகள் ஏதும் இல்லை என்றாலும், நீண்ட கால உத்திகளுக்கு இது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
முக்கியத்துவம்
சாபஹார் துறைமுகம் இந்தியாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியம்?
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சாபஹார் துறைமுகத்திற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. பாகிஸ்தானுக்கு மாற்றுப் பாதை: இந்தியா தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய பாகிஸ்தான் தன் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இதை முறியடிக்கவே, ஈரானின் சாபஹாரில் உள்ள 'ஷாஹித் பெஹெஷ்டி' முனையத்தை இந்தியா உருவாக்கியது. சர்வதேச போக்குவரத்து காரிடார்: இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் 'சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து காரிடார்' திட்டத்தின் மிக முக்கிய மையப் புள்ளியாக இந்தச் சாபஹார் விளங்குகிறது. சீனாவுக்குப் பதிலடி: அரபிக்கடல் மற்றும் ஓமன் வளைகுடாவில் சீனாவின் ஆதிக்கத்தைச் சமன் செய்ய இந்தியாவுக்குச் சாபஹார் ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.
தற்போதைய நிலவரம்
இந்தியாவின் சாதுரியமான நகர்வு
கடந்த 2024 ஆம் ஆண்டு தான் இந்தத் துறைமுகத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஈரானும் கையெழுத்திட்டன. ஆனால், அமெரிக்கா ஈரானின் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் சூழல் மாறியது. அமெரிக்காவின் தடைகளில் இருந்து தனது $120 மில்லியன் (சுமார் ₹1,000 கோடி) முதலீட்டைப் பாதுகாக்க, இந்தியா ஒரு புத்திசாலித்தனமான தற்காலிக ஏற்பாட்டைச் செய்தது. சாபஹார் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தனக்கிருந்த பங்குகளை, உள்ளூர் ஈரானிய நிறுவனம் ஒன்றிற்கு இந்தியா தற்காலிகமாக மாற்றிக் கொடுத்தது. இதன் மூலம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் தப்பித்தன. அதே நேரத்தில், சாபஹார் மீதான தனது உரிமையையோ அல்லது நீண்ட கால நோக்கத்தையோ இந்தியா கைவிடவில்லை.
அச்சுறுத்தல்
அமெரிக்க தாக்குதலால் இந்தியாவுக்கு உள்ள அச்சுறுத்தல் என்ன?
உடனடி பாதிப்பு இல்லை என்றாலும், இந்த ராணுவத் தாக்குதல் இந்தியாவின் நீண்ட காலக் கனவுக்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளது. தொடர்ந்து அங்கு குண்டுகள் வெடிப்பதும், போர் பதற்றம் நிலவுவதும் சர்வதேச வணிக நிறுவனங்களை இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தப் பயப்பட வைக்கும். இது வணிக ரீதியாகப் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தும். போர் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்காவிடம் இருந்து சாபஹார் துறைமுகத்திற்கு பிரத்யேக விலக்குகளை பெறுவதற்கான இந்தியாவின் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தற்பொழுது கடினமாக மாறியுள்ளன. பாகிஸ்தானை தாண்டி உலக சந்தைக்கு செல்ல இந்தியா அமைத்த 'நுழைவாயில்' தற்பொழுது புவிசார் அரசியல் மற்றும் போரின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.