ஈரானில் பாராசூட் இன்றி விழுந்த அமெரிக்க அதிகாரி மீண்டது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்
செய்தி முன்னோட்டம்
ஈரான் வான்வெளியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எஃப்-15ஈ (F-15E) போர் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதில், எதிரி நாட்டின் மலைப்பகுதியில் பாராசூட் சேதமடைந்து விழுந்த அமெரிக்க விமானப் படை அதிகாரி, 50 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி பின்னணியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 'டூட் 44 பிராவோ' (Dude 44 Bravo) என்ற அழைப்பு பெயரைக் கொண்ட அந்த அதிகாரி, தனது தப்பியோடல் அனுபவங்கள் குறித்து 60 மினிட்ஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாகப் பேசியுள்ளார்.
தப்பியோடல்
விபத்து மற்றும் 50 மணி நேரத் தப்பியோடல்
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி ஈரானிய ஏவுகணை தாக்குதலில் விமானம் சேதமடைந்தது.
கட்டுப்பாட்டை இழந்த அதிகாரி பிராவோவின் பாராசூட் சரியாக விரியாததால், அவர் மணிக்கு 70 முதல் 100 மைல் வேகத்தில் தரைநோக்கி விழுந்தார்.
முதுகெலும்பு, கை மற்றும் தோள்பட்டை முறிந்த நிலையிலும், ஈரானிய ராணுவத்தின் கண்ணில் படாமல் இருக்க 7,000 அடி உயரமுள்ள மலைப்பகுதிக்கு சென்று 50 மணி நேரம் உணவு மற்றும் தண்ணீரின்றி கடும் குளிரில் தலைமறைவாக இருந்தார்.
ஈரானியப் படைகள் அவர் இருந்த இடத்திற்கு சில நூறு மீட்டர்கள் வரை நெருங்கித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
சேதாரம்
$200 மில்லியன் மதிப்பிலான விமானங்கள் அழிப்பு
அதிகாரி பிராவோவை மீட்க அமெரிக்க ராணுவம் மற்றும் CIA இணைந்து பிரம்மாண்ட மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
90-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தரையிலும், நூற்றுக்கணக்கானோர் வான்வழியிலும் களமிறக்கப்பட்டனர்.
பிராவோவை மீட்ட மீட்புக் குழுவினரின் விமானங்கள் தற்காலிக மணல் பாதையில் சிக்கிக் கொண்டதால் கூடுதல் அமெரிக்கப் படைகள் விரைந்து வந்து அவர்களைப் மீட்டன
அதிநவீன தொழில் நுட்பங்கள் ஈரானிய ராணுவத்தின் கைகளில் கிடைப்பதைத் தவிர்க்க, தலா 100 மில்லியன் டாலர் மதிப்பிலான 2 அமெரிக்க விமானங்கள் மற்றும் லிட்டில் பேர்ட் ஹெலிகாப்டர்கள் அங்கேயே அமெரிக்கப் படைகளால் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டன.
ஈஸ்டர் அதிகாலையில் பத்திரமாக நாடு திரும்பிய அதிகாரி பிராவோ, இந்த மீட்பு நடவடிக்கை அமெரிக்க ராணுவத்தின் "யாரையும் கைவிடக்கூடாது" என்ற வாக்குறுதிக்கு சான்று எனக்கூறியுள்ளார்.