பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், பாகிஸ்தானுக்கு ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கடந்த காலத்தை விட அதிகமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீடு, அமெரிக்க உளவுத்துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும். இது தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகத்தால் அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்தியாவும் சீனாவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொண்டாலும், 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரும் மோதல் இருதரப்பு உறவுகளை வெகுவாக பாதித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
போருக்கான சாத்தியங்கள் இருக்கிறது: அமெரிக்கா
இதனால் இரு பெரும் அணுசக்தி நாடுகள் தங்கள் எல்லை பிரச்சனையால் ஆயுதமேந்தி மோதும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையால் அமெரிக்க மக்கள் மற்றும் அமெரிக்க நலனுக்கு நேரடி அச்சுறுத்தல் இருக்கிறது. இது அமெரிக்க தலையீட்டிற்கு அழைப்பு விடுக்கிறது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில்(எல்ஏசி) நடைபெறும் தொடர்ச்சியான சிறு உராய்வுகள் விரைவில் அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்பதையும் அந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடிகள் கவலைக்குரிய நிலையில் இருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே முன்பை போல் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.