LOADING...
2030க்குள் பூமி இதுவரை கண்டிராத உச்சக்கட்ட வெப்பத்தை சந்திக்கும்: ஐநா சபை விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை!
2030க்குள் பூமி மிக மோசமான வெப்ப ஆண்டைச் சந்திக்கும் என ஐநா எச்சரிக்கை

2030க்குள் பூமி இதுவரை கண்டிராத உச்சக்கட்ட வெப்பத்தை சந்திக்கும்: ஐநா சபை விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை!

எழுதியவர் Sekar Chinnappan
May 28, 2026
06:39 pm

செய்தி முன்னோட்டம்

பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான வெப்பமான ஆண்டை எதிர்கொள்வது உறுதி என்று ஐநா சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக, பூமியின் இந்த புதிய வெப்ப நிலை சாதனை அளவானது வரும் 2027ஆம் ஆண்டிலேயே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியாகும் கரியமில வாயு உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவதே, வளிமண்டலத்தில் வெப்பம் தேங்கி ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நாடுகளில் கடுமையான வெப்ப அலை வீசுவதற்கு முதன்மைக் காரணமாகும்.

மனித உயிர்களுக்கான பேராபத்து

பருவநிலை மாற்றத்தால் நிமிடத்திற்கு ஒரு உயிர் பலியாகும் கொடூரச் சூழல் மற்றும் மெட் ஆபீஸ் அறிக்கை

உலக வெப்பமயமாதல் மற்றும் அதீத காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போதைய சூழலிலேயே உலகளவில் சராசரியாக நிமிடத்திற்கு ஒரு மனித உயிர் பலியாகி வருவதாக ஐநா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டன் வானிலை ஆய்வு மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையின்படி, 2026 முதல் 2030 வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டு 2024 இன் வெப்ப சாதனையை முறியடிக்க 86% வாய்ப்புகள் உள்ளன. மேலும், 2026 முதல் 2030 வரையிலான ஐந்து ஆண்டு காலப்பகுதியில் பூமியின் சராசரி வெப்பநிலையானது, தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக உயர்வதற்கு 75% வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

புதைபடிவ எரிபொருள் ஒழிப்பு

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை வாட்டி வதைக்கும் வெப்ப அலை குறித்து ஐநா காலநிலை தலைவர் உரை

ஐரோப்பாவில் தற்பொழுது வீசி வரும் கடுமையான வெப்ப அலையானது பருவநிலை நெருக்கடியால் மனிதர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பேராபத்தை நமக்கு உணர்த்துகிறது என ஐநா காலநிலை தலைவர் சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார். ஐரோப்பா மட்டுமன்றி இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளும் இந்த கடுமையான கோடை வெப்பத்தினால் தற்பொழுது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். மனித உயிர்களையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், நாடுகள் அனைத்தும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் கைவிட்டு, உற்பத்திக்கு எளிதான மற்றும் மலிவான புதுப்பிக்கத்தக்கத் தூய்மையான ஆற்றலுக்கு மாற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்

பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைவதில் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக உயரும் பட்சத்தில், உலகம் கடுமையான வறட்சி, பஞ்சம், புயல் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ள பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். இருப்பினும், புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை இனி அடைவது சாத்தியமில்லை என்றே தற்போதைய சூழல் காட்டுகிறது. ஆனாலும், உலக நாடுகள் போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுத்தால் 2 டிகிரி செல்சியஸ் என்கிற அடுத்தகட்ட இலக்கை இன்னும் தக்கவைக்க முடியும் என்றும், 2030க்குள் வெப்பநிலை 2 டிகிரிக்கு மேல் உயர 1% க்கும் குறைவான வாய்ப்பே உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

Advertisement