போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காசா மற்றும் எகிப்திய எல்லையில் உள்ள நகரமான ரஃபாவில் ஒரு பெரிய இராணுவ தாக்குதலை நடத்த உள்ளதாக இஸ்ரேல் அச்சுறுத்தியதால், இந்த இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலால், காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் ரஃபாவைச் சுற்றி தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில், அந்த நகரத்தை சுற்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக மோசமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
ஐ.நா. தலைவர் குட்டெரெஸின் பயணம்
கத்தார் தலைமையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. ஆனால், புனித ரம்ஜான் மாதத்தில் ஏதேனும் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை மிகவும் குறைந்துவிட்டது. குட்டெரெஸ் தனது பயணத்தின் போது, எகிப்தின் வடக்கு சினாயில் உள்ள அல் அரிஷிற்கு சென்று, அங்கு அவர் ரஃபாவில் உள்ள ஐ.நா மனிதாபிமான ஊழியர்களை சந்திப்பார். காசாவிற்கு தேவையான சர்வதேச உதவி விநியோகம் மற்றும் சேமிப்பிற்கான முக்கிய மையம் அல் அரிஷ் ஆகும். காசாவுக்குள் உதவி அனுப்பப்படும் முதன்மை நுழைவாயிலான ரஃபா கிராசிங்கின் எகிப்தியப் பகுதியையும் ஐ.நா. தலைவர் குட்டெரெஸ் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.