LOADING...
ஐநா கறுப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷ்ய ராணுவம் சேர்ப்பு: அதிர்ச்சியூட்டும் பின்னணியும் கடுமையான எதிர்ப்பும்!
ஐநா கறுப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்ய ராணுவம்

ஐநா கறுப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷ்ய ராணுவம் சேர்ப்பு: அதிர்ச்சியூட்டும் பின்னணியும் கடுமையான எதிர்ப்பும்!

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2026
11:04 am

செய்தி முன்னோட்டம்

உலக அளவில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள இந்த 35 பக்க விரிவான அறிக்கையானது, சர்வதேச அளவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 77 அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளைப் பட்டியலிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 இல் உலகளாவிய போர் மண்டலங்களில் இத்தகைய கொடூரமான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த 2023 அக்டோபர் 7 தாக்குதலின் பின்னணியில் ஹமாஸ் அமைப்பினர் இப்பட்டியலில் நீடிக்கின்றனர்.

இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள்

பாலஸ்தீன கைதிகளுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் நிகழ்த்திய அத்துமீறல்கள் குறித்த ஐநாவின் விபரம்

காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு எதிராக முறையற்ற பாலியல் வன்முறைப் போக்குகள் அரங்கேறியுள்ளதாக ஐநா அறிக்கை உறுதிபடத் தெரிவிக்கிறது. இதில் காசாவைச் சேர்ந்த 14 ஆண்கள், 7 பெண்கள், 9 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி உள்ளிட்ட பாலஸ்தீனியர்கள் மிகக் கடுமையான பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக ஐநா ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேலிய சிறைச்சாலைகள் மற்றும் சிறப்புப் போலீஸ் பிரிவுகளின் மூலம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கட்டாய நிர்வாணப்படுத்துதல் மற்றும் பிறப்புறுப்புகளைத் தாக்குதல் போன்ற கொடூரங்கள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தீவிரமான புகார்களை முற்றிலும் மறுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலுக்கு எதிரான ஐநாவின் தன்னாட்சி விரோதப் போக்கையே இந்த அறிக்கை காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யா மற்றும் ஹமாஸ் மீதான புகார்கள்

உக்ரைன் போர்க்கள கைதிகள் மீதான ரஷ்யாவின் அத்துமீறல்களும் ஐநா குழுவிற்கான அணுகல் தடைகளும்

உக்ரைனுக்கு எதிரான போரில் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகள் மற்றும் சிவிலியன்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறி ரஷ்யாவும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்யக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மனித உரிமை ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், அங்கு 310 பாலியல் வன்முறை வழக்குகளை ஐநா வெற்றிகரமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, உக்ரைன் தரப்பில் பதிவான 31 வழக்குகளில் பெரும்பாலானவை 2025க்கு முன் நடந்தவை என்பதால் உக்ரைன் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹமாஸ் அமைப்பின் மீதான பாலியல் புகார்களைத் தொடர்ந்து பட்டியலிடும் ஐநா, இஸ்ரேல் தங்களுக்கு உரிய கள ஆய்வு அனுமதியை வழங்க மறுப்பதால் ஹமாஸ் மீதான பல விபரங்களைத் தனித்துச் சரிபார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

சர்வதேச நாடுகள் எதிர்ப்பு

"இவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள்" - ஐநா அறிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் ரஷ்ய தூதர்கள் கடும் கண்டனம்

ஐநா-வின் இந்த சர்ச்சைக்கிற்குரிய கறுப்புப் பட்டியல் வெளியீடானது, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் தூதர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஐநா தூதர் வாஸிலி நெபென்சியா இது குறித்துப் பேசுகையில், ரஷ்யாவை எப்போதும் ஒரு வில்லனாகக் காட்ட முனையும் ஐநாவின் இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்ற பொய் மூட்டை என்று கடுமையாகச் சாடியுள்ளார். அதேபோல், இஸ்ரேலின் தூதர் டேனி டானன் தெரிவிக்கையில், ஐநா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஹமாஸ் போன்ற கொடூர பயங்கரவாத அமைப்புகளின் வரிசையில் இஸ்ரேலையும் நிறுத்தியுள்ளார் என்று வேதனை தெரிவித்துள்ளார். விரிவான விளக்கங்களையும், ஆதாரங்களையும் இஸ்ரேல் சமர்ப்பித்த பின்னரும் தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதால், இனி ஐநா பொதுச்செயலாளருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

Advertisement