LOADING...
உக்ரைனின் மிகப்பெரிய உளவு கப்பலை ட்ரோன் மூலம் தாக்கி மூழ்கடித்தது ரஷ்யா
உக்ரைனின் மிகப்பெரிய உளவு கப்பலை ட்ரோன் மூலம் தாக்கியழித்தது ரஷ்யா

உக்ரைனின் மிகப்பெரிய உளவு கப்பலை ட்ரோன் மூலம் தாக்கி மூழ்கடித்தது ரஷ்யா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2025
11:36 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, உக்ரைன் கடற்படையின் உளவு கப்பலான சிம்ஃபெரோபோலை கடற்படை ட்ரோன் தாக்குதல் மூலம் வெற்றிகரமாக மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்திற்கு அருகே உள்ள டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வானொலி மற்றும் மின்னணு உளவுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட லாகுனா-வகை கப்பல், ஆளில்லா கடல் ட்ரோனால் தாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ், ஒரு யுஏவி நிபுணரை மேற்கோள் காட்டி, உக்ரைன் கடற்படை கப்பலை அழிக்கக் கடல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் தாக்கப்பட்டதை உக்ரைன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

உயிரிழப்பு

கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

உக்ரைனின் ஒரு கடற்படை செய்தித் தொடர்பாளர் கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம், இந்தத் தாக்குதலில் ஒரு கடற்படை உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். காணாமல் போன சில மாலுமிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிம்ஃபெரோபோல் கப்பல் 2021இல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது உக்ரைன் கடற்படைக்கு ஒரு முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டது. சில அறிக்கைகளின்படி, 2014 க்குப் பிறகு உக்ரைனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் இதுவாகும். இந்தச் சம்பவம், நடந்துவரும் போரில் ஆளில்லா அமைப்புகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. சமீப மாதங்களில், ரஷ்யா கடற்படை ட்ரோன்கள் மற்றும் பிற ஆளில்லா அமைப்புகளின் உற்பத்தியை விரைவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.