LOADING...
ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! 200 ட்ரோன்கள் மூலம் மாஸ்கோவை உலுக்கிய வான்வழித் தாக்குதல்
மாஸ்கோ மீது உக்ரைன் வான்வழித் தாக்குதல்

ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! 200 ட்ரோன்கள் மூலம் மாஸ்கோவை உலுக்கிய வான்வழித் தாக்குதல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 18, 2026
07:55 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 200 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ரஷ்யாவின் அதிபர் மாளிகையான கிரெம்ளினில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாஸ்கோ நகரின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவென்று ரஷ்ய அரசு ஊடகமான டாஸ் தெரிவித்துள்ளது.

ஆலை தகர்ப்பு

7 ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்ட காஸ்ப்ரோம் நெப்ட் ஆலை

மாஸ்கோவின் கபோட்னியா நிர்வாக மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரஷ்யாவின் பொதுத்துறை நிறுவனமான காஸ்ப்ரோம் நெப்ட் அமைப்புக்கு சொந்தமானதாகும். ஆண்டிற்கு 12 மில்லியன் டன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலையின் மீது, உக்ரைனின் 7 ட்ரோன்கள் அடுத்தடுத்து மோதி வெடித்தன. இதனால் ஆலை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இத்தளம் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் 70 சதவீத பெட்ரோல் தேவையைப் பூர்த்தி செய்து வந்ததால், தற்பொழுது தலைநகரில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மாஸ்கோ மேயர்

194 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மேயர் அறிவிப்பு

இந்த தாக்குதல் குறித்து மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தனது டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாஸ்கோவின் வான் பாதுகாப்புப் படை ஒரே இரவில் மட்டும் நகருக்குள் ஊடுருவ முயன்ற 194 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களில் மொத்தம் 555 ட்ரோன்களை அழித்துள்ளதாகக் கூறியுள்ளது. இருப்பினும், விடியற்காலையில் 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மாஸ்கோ வானில் வெடித்த போது, நகரின் எவ்வித வான்வழி ஆபத்து எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்காததால் பொதுமக்கள் பெரும் குழப்பத்திற்கும் உள்ளாகினர்.

Advertisement

போக்குவரத்து துண்டிப்பு

விமான நிலையங்கள் முடக்கம்

இந்த ட்ரோன் தாக்குதலின் விளைவாக மாஸ்கோ நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் ஆலை தீப்பற்றி எரிந்ததால், அதன் அருகே உள்ள மாஸ்கோவின் பிரதான சுற்றுவட்டாரச் சாலைகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவில் உள்ள டொமோடெடோவோ, வ்னுகோவோ, ஷெரெமெட்டியேவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு, அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஆலை தவிர சில அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக மாஸ்கோ கவர்னர் ஆண்ட்ரே வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது நியாயமான பதிலடி

நேட்டோ கூட்டத்தில் ஜெலென்ஸ்கி அறிக்கை

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேட்டோ தலைவர்களுடனான உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி இத்தாக்குதல் குறித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "எங்கள் நகரங்கள் மற்றும் மக்கள் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு உக்ரைன் கொடுத்துள்ள முற்றிலும் நியாயமான மற்றும் தகுந்த பதிலடி இதுவாகும். எங்களின் நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறனை உலக நாடுகள் தற்பொழுது கண்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார். இதற்கு மறுநடவடிக்கையாக ரஷ்யா உடனடியாக உக்ரைனின் கைவ் மற்றும் பொல்டாவா பிராந்தியங்கள் மீது 7 ஏவுகணைகள் மற்றும் 239 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் வியூகம்

ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தைச் சிதைக்கும் உக்ரைனின் வியூகம்

மாஸ்கோ எண்ணெய் ஆலை மீதான தாக்குதல் என்பது உக்ரைனின் நீண்ட கால மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தை முடக்குவதற்காக, உக்ரைன் 2024 முதல் ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் திட்டமிட்டுத் தாக்கி வருகிறது. ரஷ்யாவில் உள்ள மொத்தம் 33 முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 24 நிலையங்களை உக்ரைன் ஏற்கனவே தாக்கியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை மொத்தம் 158 முறை இத்தகைய தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் 20 முதல் 40 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யா, கடல் வழியாகப் பெட்ரோலை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Advertisement