பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே பெண் கருக்கலைப்பு அதிகரிப்பு: பகீர் கிளப்பும் சமீபத்திய ஆய்வு
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களிடையே ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண் கருக்கலைப்புகள் சாதனை அளவில் அதிகரித்துள்ளதாக 'தி டெய்லி மெயில்' இதழின் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 2021- 2025 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நூற்றுக்கணக்கான பெண் கருக்கலைப்புகள் பாலின அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனின் தேசிய சராசரி 100 பெண் குழந்தைகளுக்கு 105 ஆண் குழந்தைகள் என்பதாக உள்ளது. ஆனால், இந்தியத் தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளின் விகிதம் 100 பெண் குழந்தைகளுக்கு 118 ஆண் குழந்தைகள் என்ற அளவில் மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளைக் கொண்ட இந்தியப் பெற்றோர்கள், மூன்றாவது முறையாக பெண் கரு உருவாகும்போது அதைக் கலைப்பதாகத் தரவுகள் காட்டுகின்றன.
சமூக காரணங்கள்
குடும்ப அழுத்தமும் சமூகக் காரணங்களும்:
2017-2021 காலகட்டத்தில் மட்டும் இதன் காரணமாக சுமார் 400 பெண் கருக்கலைப்புகள் நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22-ல் 114:100 என இருந்த ஆண்-பெண் பிறப்பு விகிதம், 2023-24-ல் 118:100 ஆக உயர்ந்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஜீனா இன்டர்நேஷனல்' (Jeena International) அமைப்பின் நிறுவனர் ராணி பில்கு கூறுகையில், "இந்தியச் சமூகத்தில் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் மட்டுமே தங்களுக்கு மதிப்பு இருப்பதாகப் பெண்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். குடும்பத்தினரின் கட்டாயத்தினாலேயே இந்தப் பெண்கள் கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
சட்டம்
பிரிட்டன் சட்டம் என்ன சொல்கிறது?
கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கர்ப்ப ஆலோசனை சேவை என்ற தொண்டு நிறுவனம் பாலினத்தை அடிப்படையாக கொண்ட கருக்கலைப்பு "சட்டவிரோதமானது அல்ல" என்று கூறியதற்காக விமர்சிக்கப்பட்டது. பிரச்சாரகர்கள் இந்த ஆலோசனையை எதிர்த்துப் பேசினர், இது "பொறுப்பற்றது" என்றும், ஆண் குழந்தைகளை பெற இந்தியத் தாய்மார்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை சுட்டிக்காட்டினர். பிரிட்டனின் 1967-ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்தின்படி, ஒரு குழந்தையின் பாலினத்தை காரணமாக கொண்டு கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது. பதிவுசெய்யப்பட்ட இரண்டு மருத்துவ பயிற்சியாளர்கள் குழந்தை பிறந்தால் அதற்கு "கணிசமான ஆபத்து" இருப்பதாகவும், கர்ப்பம் அதன் இருபத்தி நான்காவது வாரத்தை தாண்டவில்லை என்றும் நம்பும்போது கருக்கலைப்பு செய்யப்படலாம் என்று கூறுகிறது. இந்த அபாயங்களில் கடுமையான உடல் அல்லது மன அசாதாரணங்களும் அடங்கும்.