'ரேப் கேங்' கொடுமைகளை கண்ணீருடன் விவரித்த UK எம்.பி; லண்டனை உலுக்கும் அதிர்ச்சிப் பின்னணி!
செய்தி முன்னோட்டம்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்பி ரூபர்ட் லோவ் நிகழ்த்திய உருக்கமான உரை, அங்கு பல தசாப்தங்களாக நீடித்து வரும் 'Grooming Gangs' எனப்படும் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சர்ச்சையை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது. லண்டன் நாடாளுமன்றக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை அவர் வாசித்த போது ஒட்டுமொத்த அவையும் அதிர்ச்சியில் உறைந்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை வாசித்த ரூபர்ட் லோவ், "இதைக் கேட்கவே நமக்குக் கடினமாக இருக்கிறது, ஆனால் இந்த உலகம் இதைக் கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
வாக்குமூலங்கள்
நாடாளுமன்றத்தை உலுக்கிய கொடூர வாக்குமூலங்கள்
ஒரு பெண் தனது 12 வயதில் சந்தித்த கொடூரத்தையும், மற்றொரு பெண் 13 வயதிலிருந்து மூன்று ஆண்டுகளில் சுமார் 600 முதல் 700 ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் விவரித்தார். மேலும், தங்களின் மத அடையாளம் மற்றும் இனத்தைக் குறிப்பிட்டு குற்றவாளிகள் தங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தெரிவித்துள்ள அடுக்கடுக்கான கொடூரங்களை அவர் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.
புகார்கள்
அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீதான கடுமையான புகார்கள்
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகப் பிரிட்டன் காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மீது பாதிக்கப்பட்ட பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் உரிய விசாரணை நடத்தாமல் அவரை வீட்டிற்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சில காவல்துறை அதிகாரிகளே தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது பிரிட்டன் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நெட்வொர்க்
85 பகுதிகளில் பரவியுள்ள நெட்வொர்க்
கடந்த ஆண்டு ரூபர்ட் லோவ் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு தனியார் விசாரணையில், பிரிட்டன் முழுவதும் குறைந்தது 85 பகுதிகளில் இத்தகைய திட்டமிட்ட 'ரேப் கேங்' நெட்வொர்க்குகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த சில ஆண்கள் குழுக்களாக இணைந்து, ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த வெள்ளை இனச் சிறுமிகளைக் குறிவைத்து, அவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் கொடுத்து இத்தகைய கொடூரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய புகார்கள் எழுந்த போதிலும், அதிகாரிகள் இன ரீதியான விமர்சனங்களுக்கு அஞ்சி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. "பாதிக்கப்பட்ட இந்த அப்பாவிப் பிள்ளைகளுக்காக உடனடியாகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று எம்பி ரூபர்ட் லோவ் பிரிட்டன் அரசை வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I want the world to hear what we heard. pic.twitter.com/2DtCS0QztE
— Rupert Lowe MP (@RupertLowe10) June 1, 2026