LOADING...
ஹீட் டோம்: மே மாதத்தில் கொதிக்கும் லண்டன், பிரான்ஸ், உருகும் ரயில் தண்டவாளங்கள்
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது

ஹீட் டோம்: மே மாதத்தில் கொதிக்கும் லண்டன், பிரான்ஸ், உருகும் ரயில் தண்டவாளங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2026
01:03 pm

செய்தி முன்னோட்டம்

ஐரோப்பிய நாடுகளில் தற்போதைய வசந்த காலத்திலேயே கோடைக்காலத்தை மிஞ்சும் அளவுக்குக் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது. குறிப்பாகப் பிரிட்டன் (UK) மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில், 100 ஆண்டுகள் பழமையான வெயில் சாதனைகள் அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டு ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதீத வெப்ப அலையின் காரணமாகப் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளன. வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏரிகள் மற்றும் கடல்களில் குளித்த போது ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை பிரிட்டனில் 5 பேரும், பிரான்சில் 7 பேரும் எனப் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

சாதனை

லண்டனில் பதிவான 'Mind-Boggling' சாதனை

பிரிட்டனின் வானிலை ஆய்வு மையமான 'Met Office' வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகளின்படி, லண்டனின் கியூ கார்டன்ஸ் பகுதியில் 35.1 டிகிரி செல்சியஸ் (95.2°F) வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய நாள் தான் அங்கு 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி சாதனை படைத்திருந்தது. இதற்கு முன்னதாக, கடந்த 1922 மற்றும் 1944-ஆம் ஆண்டுகளில் பதிவான 32.8 டிகிரி செல்சியஸ் வெயில் அளவே மே மாதத்தின் மிக அதிகபட்ச வெப்பமாக இருந்தது. அந்த 100 ஆண்டுக்கால சாதனையை இந்த வாரம் பதிவான வெயில் சுக்குநூறாக உடைத்துள்ளது. மேலும், லண்டனில் இரவு நேரத்திலும் கூட வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸிற்கு கீழே குறையாமல், ஒரு அரிய 'அயனமண்டல இரவு' (Tropical Night) சூழல் நிலவியது.

ஹீட் டோம்

வெயிலை முடக்கிய 'ஹீட் டோம்' (Heat Dome)

பிரான்சின் தென்மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் (97°F) வரை உயர்ந்துள்ளது. இது வழக்கமாக இந்த காலகட்டத்தில் பதிவாகும் வெப்பநிலையை விட 10 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். பிரான்ஸ் வானிலை அமைப்பான 'Météo-France' விடுத்துள்ள விளக்கத்தில், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்த வானிலை காரணமாக, வெப்பக் காற்று ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் சிறைப்பட்டு வெளியேற முடியாமல் தவிப்பதே இந்த 'ஹீட் டோம்' (வெப்பக் குமிழ்) விளைவுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

சவால்கள்

இயல்பு வாழ்க்கை பாதிப்பு & உள்கட்டமைப்பு சவால்கள்

பிரிட்டன் மற்றும் பிரான்சில் வழக்கமாக மிதமான காலநிலையே நிலவும் என்பதால், அங்குள்ள பெரும்பாலான வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்களில் ஏசி வசதிகள் கிடையாது. இதனால் மக்கள் கடுமையான உஷ்ணத்தால் தவித்து வருகின்றனர். லண்டனின் பரபரப்பான வாட்டர்லூ ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள், தண்டவாளத்தில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக நிறுத்தப்பட்டன. அதீத வெப்பத்தால் தண்டவாளங்கள் விரிவடைவதே இதற்குப் பின்னணியாகப் பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் உள்ள புகழ்பெற்ற 'ஆர்தர்ஸ் சீட்' புல்வெளிப் பகுதியில் விடிய விடியக் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதேபோல் ஸ்பெயினின் செவில்லியா நகரில் 38 டிகிரி செல்சியஸும், இத்தாலியின் ரோம் நகரில் 32 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகி ஐரோப்பா முழுவதையும் கோடைக்காலத்திற்கு முன்பே தகிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

Advertisement