Loading...
'ஈரானுடன் இனி வர்த்தகமே இல்லை': அனைத்து நிதியுதவிகளையும் உடனடியாக நிறுத்திய அமீரகம்
நிதி பரிவர்த்தனைகளை மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக சஸ்பெண்ட் செய்வதாக UAE அறிவித்துள்ளது

'ஈரானுடன் இனி வர்த்தகமே இல்லை': அனைத்து நிதியுதவிகளையும் உடனடியாக நிறுத்திய அமீரகம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
07:25 am

செய்தி முன்னோட்டம்

இப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீவிரப் போர் பதற்றத்தைத் தொடர்ந்து, ஈரானுடனான அனைத்து வகையான வர்த்தகம், வணிகப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக சஸ்பெண்ட் செய்வதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிவித்துள்ளது. அமீரகக் கடல் எல்லை பகுதியை குறிவைத்து ஈரானில் இருந்து இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் வர்த்தக முடக்கத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான சுமார் $28 பில்லியன் மதிப்பிலான இருதரப்புப் பண்டங்கள் வர்த்தகம் பெரும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாதிப்பு

பல பில்லியன் மதிப்பிலான வணிகம் பாதிப்பு

உலக வர்த்தக அமைப்பின் (WTO) தரவுகளின்படி, ஈரானின் மொத்த இறக்குமதியில் 30.6% பங்களிப்பை அமீரகமே வகிக்கிறது.

அமீரகத்தில் இருந்து சுமார் $21 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் ஈரானுக்கு இறக்குமதி செய்யப்படும் வேளையில், ஈரானில் இருந்து $7.16 பில்லியன் பொருட்கள் அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சர்வதேச நாடுகளின் தடைகள், வங்கி மற்றும் எரிசக்தித் துறையில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஈரானுக்கு, அமீரகத்தின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய வணிக ரீதியிலான பின்னடைவை ஏற்படுத்தும்.

ஏவுகணை தாக்குதல்

பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை அன்று ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான்வழி பாதுகாப்புப் படை கண்டறிந்ததாக அமீரகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு ஏவுகணை அமீரகத்தின் கடல் எல்லைக்கு வெளியேயும், மற்றொரு ஏவுகணை கடல் எல்லைக்குள்ளும் விழுந்தன.

இந்தத் தாக்குதல்கள் கடல்சார் வணிகப் போக்குவரத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக அமீரகம் குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளையில், ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் இக்குற்றச்சாட்டுகளை முற்றிலும் "ஆதாரமற்றவை" என மறுத்துள்ளார்.

ADVERTISEMENT

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியில் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு (ADNOC) சொந்தமான கப்பல்கள் மீது நடத்தப்பட்டத் தொடர் தாக்குதல்களுக்கும் ஈரான் மீது அமீரகம் குற்றம்சாட்டியுள்ளது.

அமைதி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பைக் கடைப்பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அமீரக வெளியுறவு அமைச்சகம், சர்வதேச நிதி அமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இத்தகைய நிதி மற்றும் வர்த்தகத் தடைகளை அமல்படுத்தியுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT