பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. விசா விண்ணப்பதாரர்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் போலியான ஆவணங்கள் சமர்ப்பிப்பது அதிகரித்ததன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பல பாகிஸ்தானியப் பயணிகள் கிரிமினல் வழக்குகளில் சிக்குவது குறித்தும், அவர்கள் சமர்ப்பிக்கும் கல்வி மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் குறித்தும் கவலை தெரிவித்தது. போலி ஆவணங்களைத் தடுக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த அமைப்புகள் மூலம் ஆவணங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கின்றனர்.
அனுமதி
யாருக்கு அனுமதி?
பாகிஸ்தானின் மேலவைக்கு உள்துறை இணைச் செயலாளர் சல்மான் சௌத்ரி அளித்த விளக்கத்தில், தொடர்ச்சியான சிக்கல்களால் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டும் பாகிஸ்தானிய பாஸ்போர்ட்களை முறையாகத் தடை செய்வதன் விளிம்பிற்கு வந்ததாகத் தெரிவித்தார். தற்போது, சாதாரண பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களுக்கு விசா கிடைப்பதில் அதிகாரபூர்வமற்றத் தடை நிலவுகிறது. இருப்பினும், தூதரக மற்றும் நீல பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் இந்தத் தடையால் பாதிக்கப்பட மாட்டார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் கிரிமினல் நடவடிக்கைகளில் பாகிஸ்தானியர்கள் மீண்டும் மீண்டும் ஈடுபட்டதாலேயே விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்தத் தடையை நீக்குவது குறித்து எந்தக் காலக்கெடுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.