உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி
கிழக்கு உக்ரேனிய பகுதிகளில் ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலை உக்ரைன் முறியடித்ததால், டிசம்பரில் இருந்து ரஷ்யாவை சேர்ந்த 1,00,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 20,000க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது. கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் கடுமையான போர்கள் நடந்துள்ளன. உக்ரனிய பாதுகாப்பை மீறி பாக்முட் நகரத்தை சுற்றி வளைக்க ரஷ்யா போராடி வருகிறது. அமெரிக்காவின் இந்த மதிப்பீடுகள் புதிதாக கிடைத்த அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். உளவுத்துறைக்கு இந்த தகவல் எவ்வாறு கிடைத்தது என்பதை அவர் விவரிக்கவில்லை.
ரஷ்யாவிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகமாகி உள்ளது: புள்ளிவிவரங்கள்
அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, "போரின் முதல் எட்டு மாதங்களில் ரஷ்யாவை சேர்ந்த 1,00,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்/காயமடைந்தனர்" என்று நவம்பர் மாதம் கூறினார். சமீப காலமாக, இந்த போரினால் ரஷ்யாவிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகமாகி உள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாக்முத்தை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது, ஆனால் அந்த முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளது என்று உக்ரேனிய தரைப்படைகளின் தலைவரான கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார். சண்டையில் எத்தனை உக்ரேனிய துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்பதை கூற ஜான் கிர்பி மறுத்துவிட்டார்.