துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்
துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் அன்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 8400 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது. இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்டெடுக்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 7.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கத்தை அடுத்து 100க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டது. இதில், பல்வேறு பெரும் நிலநடுக்கங்களும் அடங்கும். சிரியாவில் மீட்பு பணியின் போது பிறந்த குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. குழந்தைக்கு தொப்புள் கொடியை அறுக்கும் முன்பே நிலநடுக்கம் ஏற்பட்டதால், அந்த குழந்தை தாயுடன் தொப்புள் கொடியால் பிணைந்து இருக்கும் நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த குழந்தையின் பெற்றோர்கள் உயிரிழந்துவிட்டனர். அதன் குடும்பத்தில் அந்த குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது.
20,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்: உலக சுகாதார அமைப்பு
சிரியாவில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசாங்கமும் மீட்புப் படையினரும் தெரிவித்துள்ளனர். துருக்கியின் புதிய உயிரிழப்பு எண்ணிக்கை 5,894ஆக அதிகரித்துள்ளது. எனவே, இரு நாடுகளிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் 8400ஐ எட்டியுள்ளது. 20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என WHO அதிகாரிகள் மதிப்பிட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டிருக்காலம் என்று WHO எச்சரித்ததிருக்கிறது. அதனால், பேரழிவு நடந்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்ய உலக நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று WHO வலியுறுத்தி உள்ளது.