LOADING...
"இதுவே கடைசி எச்சரிக்கை! ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் எண்ணெய் கிணறுகள் தரைமட்டமாகும்": ஈரானை மிரட்டும் ட்ரம்ப்
ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

"இதுவே கடைசி எச்சரிக்கை! ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் எண்ணெய் கிணறுகள் தரைமட்டமாகும்": ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 30, 2026
05:49 pm

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் அந்நாட்டின் எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானின் தற்போதைய புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தையில் "முக்கிய முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி தடையின்றி கப்பல் போக்குவரத்திற்குத் திறக்கப்பட வேண்டும், உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், ஈரானின் எண்ணெய் கிணறுகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை அமெரிக்கா "தரைமட்டமாக்கும்" என எச்சரித்துள்ளார்.

தாக்குதல்

ஏன் இதுவரை தாக்கவில்லை?

மேலும், கடந்த 47 ஆண்டுகளில் ஈரானிய ஆட்சியால் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கான "பதிலடியாக" இந்தத் தாக்குதல் அமையும் என அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான இடங்களை அமெரிக்கா இதுவரை "நோக்கத்துடனேயே" தாக்காமல் இருந்ததாகவும், ஆனால் இனி அந்த நிலை நீடிக்காது என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை போரை மேலும் தீவிரப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஈரானுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வரை அவர் அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement