LOADING...
ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை

ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 20, 2025
09:26 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்குவதை இந்தியா விரைவில் நிறுத்திவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாகத் தனது முந்தைய கூற்றை மீண்டும் வலியுறுத்தினார். "இந்தியப் பிரதமர் மோடியுடன் நான் பேசினேன், அவர் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்று கூறினார்." என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

நிராகரிப்பு

இந்தியா நிராகரிப்பு

இந்தியா தொடர்ந்து வாங்க முடிவு செய்தால், அவர்கள் அதிகபட்ச வரிகளைத் தொடர்ந்து செலுத்த வேண்டியிருக்கும் மற்றும் இந்தியா அதை விரும்பாது என்றும் டொனால்ட் டிரம்ப் மேலும் கூறினார். தற்போது அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள மொத்த வரி 50 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இந்திய அரசு அமெரிக்க அதிபரின் இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்புக்கும் இடையே இந்த விவகாரம் குறித்து எந்தவிதமான உரையாடலும் நடந்ததாகத் தெரியவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்திய அரசின் எரிசக்தி கொள்கை, இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கிறது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.