"நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!": எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் அதிர்ச்சி வைத்தியம்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளுக்கு அதிரடியான மற்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், தங்களுக்குத் தேவையான எரிபொருளை அமெரிக்காவிடம் வாங்க வேண்டும் அல்லது சொந்தமாகப் ராணுவத்தை அனுப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
“All of those countries that can’t get jet fuel because of the Strait of Hormuz, like the United Kingdom, which refused to get involved in the decapitation of Iran, I have a suggestion for you…” - President Donald J. Trump pic.twitter.com/aPYmL0qspa
— The White House (@WhiteHouse) March 31, 2026
இரண்டு தேர்வுகள்
நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த இரண்டு தேர்வுகள்
செவ்வாய்க்கிழமை அன்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நாடுகளுக்கு இரண்டு வழிகளை முன்வைத்துள்ளார். "ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் விமான எரிபொருள் (Jet Fuel) கிடைக்காமல் தவிக்கும் நாடுகள், குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகள், என்னிடம் இரண்டு ஆலோசனைகளைப் பெறலாம்: ஒன்று, எங்களிடம் தாராளமாக எரிபொருள் உள்ளது, அதை எங்களிடமிருந்து விலைக்கு வாங்குங்கள். இரண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நீங்களே ஜலசந்திக்குச் சென்று உங்களுக்கான எண்ணெயைப் பறித்துக்கொள்ளுங்கள்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டனம்
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குக் கடும் கண்டனம்
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவுடன் இணைய மறுத்த நட்பு நாடுகளை ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகள் ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்கத் தயங்குவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டபோது நீங்கள் உதவிக்கு வரவில்லை; எனவே இனி அமெரிக்கா உங்களுக்கு உதவாது. உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்களே சண்டையிடக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் அழைப்பை ஏற்றுப் போர்க்கப்பல்களை அனுப்பாத நட்பு நாடுகளுக்கு இது ஒரு நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலையேற்றம்
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கமும் கச்சா எண்ணெய் விலையேற்றமும்
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் இந்த முக்கிய வழித்தடம் முடங்கியதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75 டாலரில் இருந்து 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரானுக்குப் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் ஜலசந்தியைத் திறக்க முடியாத நிலையில், ட்ரம்ப் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, பாதிப்படைந்த நாடுகள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான்
ஈரான் பலவீனம் அடைந்துவிட்டதாக ட்ரம்ப் உறுதி
ஈரான் மீதான தாக்குதல்கள் மூலம் அந்நாடு "முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது" என்று ட்ரம்ப் உறுதிபட கூறியுள்ளார். கடினமான பணிகளை அமெரிக்கா ஏற்கனவே முடித்துவிட்டதாகவும், இனி அந்தப் பகுதியில் இருந்து எண்ணெயைப் பெறுவது அந்தந்த நாடுகளின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த அணுகுமுறை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எரிசக்தித் தேவைக்காக வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு இது மிகப்பெரிய பொருளாதாரச் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, உலக நாடுகள் தங்களது எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளன.