LOADING...
பிப்ரவரி 1 முதல் 10 சதவீதம் கூடுதல் வரி; ஐரோப்பிய நாடுகள் மீது வரி யுத்தத்தைத் தொடங்கியது அமெரிக்கா
டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் மீது 10% வரி விதித்தார் டிரம்ப்

பிப்ரவரி 1 முதல் 10 சதவீதம் கூடுதல் வரி; ஐரோப்பிய நாடுகள் மீது வரி யுத்தத்தைத் தொடங்கியது அமெரிக்கா

எழுதியவர் Sekar Chinnappan
Jan 18, 2026
08:38 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்தில் மிகவும் தீவிரமாக உள்ளார். தனது டிரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கிரீன்லாந்தை அமெரிக்காவிற்கு விற்க டென்மார்க் மறுத்து வருவதற்கும், அந்த முடிவிற்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் ஒத்துழைக்காத நாடுகள் மீது பிப்ரவரி 1 முதல் 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாடுகள்

வரி விதிப்புக்கு உள்ளான நாடுகள்

டிரம்பின் இந்த அறிவிப்பால் டென்மார்க் மட்டுமின்றி, அதனை ஆதரிக்கும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் பிப்ரவரி 1 முதல் 10 சதவீத வரி விதிக்கப்படும். மேலும், ஜூன் 1 ஆம் தேதிக்குள் கிரீன்லாந்தை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், இந்த வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உலக அமைதி

பாதுகாப்பு மற்றும் உலக அமைதி

கிரீன்லாந்து விவகாரத்தில் தனது பிடிவாதத்திற்குப் பாதுகாப்பு காரணங்களையே டிரம்ப் முன்வைக்கிறார். "சீனாவும் ரஷ்யாவும் கிரீன்லாந்தைக் கைப்பற்றத் துடிக்கின்றன, அதைத் தடுக்கும் சக்தி டென்மார்க்கிடம் இல்லை" என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உலக அமைதி அடங்கியிருப்பதாகவும், அமெரிக்காவினால் மட்டுமே இந்தப் பகுதியைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் வாதிடுகிறார். பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விலக்கு அளித்து அமெரிக்கா உதவி வந்ததாகவும், இப்போது அவர்கள் கைமாறாகக் கிரீன்லாந்தை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தாக்கம்

சர்வதேச அளவில் ஏற்படும் தாக்கம்

அமெரிக்காவின் இந்தத் திடீர் வரி விதிப்பு அறிவிப்பு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை இது நேரடியாகப் பாதிக்கும். புனிதமான நிலப்பரப்பு (Sacred piece of Land) என்று டிரம்பால் வர்ணிக்கப்படும் கிரீன்லாந்தைச் சுற்றி தற்போது ஒரு மிகப்பெரிய சர்வதேச இராஜதந்திரப் போர் உருவாகியுள்ளது. இது உலக நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

Advertisement