சூர்யாவின் கிளாசிக் ஹிட் 'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ்! யுவன் இசை, த்ரிஷாவின் அறிமுகம்; மீண்டும் தியேட்டரில் பார்க்கத் தயாரா?
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் சமீபகாலமாகப் பழைய வெற்றிப் படங்களை டிஜிட்டல் முறையில் மெருகேற்றி மீண்டும் வெளியிடும் ரீரிலீஸ் கலாச்சாரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரஜினிகாந்தின் பாட்ஷா, விஜயின் கில்லி, சூர்யாவின் வாரணம் ஆயிரம் போன்ற படங்களைத் தொடர்ந்து, தற்போது சூர்யாவின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான படமான மௌனம் பேசியதே மீண்டும் திரைக்கு வரத் தயாராகிவிட்டது.
24 ஆண்டுகள்
24 ஆண்டுகளுக்குப் பின் மௌனம் பேசுகிறது
இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் மௌனம் பேசியதே. இதில் சூர்யா, த்ரிஷா, லைலா, நந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் இது என்பதால், த்ரிஷாவின் ரசிகர்களுக்கும் இது ஒரு விசேஷமான செய்தியாகும்.
இசை
யுவன் சங்கர் ராஜாவின் காலத்தால் அழியாத இசை
மௌனம் பேசியதே படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மிக முக்கியக் காரணமாக இருந்தது. என்னுயிரே என்னுயிரே, ஆடாதடா ஆடாதடா போன்ற பாடல்கள் இன்றும் இளைஞர்களின் ப்ளே-லிஸ்டில் முதலிடத்தில் உள்ளன. குறிப்பாக இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் சூர்யாவின் தனித்துவமான நடிப்பு படத்திற்கு ஒரு கிளாசிக் அந்தஸ்தைத் தேடித்தந்தது. மீண்டும் தியேட்டரில் அந்த இசை அனுபவத்தைப் பெற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சூர்யா
சூர்யாவின் மாறுபட்ட நடிப்பு
சூர்யா இந்தப் படத்தில் கவுதம் என்ற அமைதியான, அதே சமயம் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். காதலை வெறுக்கும் ஒருவன், மீண்டும் காதலில் விழும் போது ஏற்படும் மாற்றங்களை மிக நேர்த்தியாக அமீர் இயக்கியிருப்பார். சூர்யாவின் தற்போதைய பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில், இந்த எதார்த்தமான காதல் படத்தை மீண்டும் திரையில் பார்ப்பது சூர்யா ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். இது அடுத்த மாதம் காதலர் தினத்தில் வெளியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.