ஈரானுக்கு தினமும் ₹4100 கோடி இழப்பு: அதிரடி காட்டும் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ள அதே வேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையின் கடுமையான முற்றுகை தொடரும் என எச்சரித்துள்ளார். இந்த முற்றுகை காரணமாக ஈரானுக்கு நாளொன்றுக்கு சுமார் 500 மில்லியன் டாலர்(சுமார் ₹4,100 கோடி) வருவாய் இழப்பு ஏற்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க விரும்புகிறது, ஏனென்றால் அது மூடப்பட்டிருப்பதால் அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள். நான் முற்றுகையிட்டுள்ளதால் தங்களின் முகத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அதை மூட விரும்புவதாகக் கூறுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
வீழ்ச்சி
கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
முன்பு ஒரு நாளைக்குச் சுமார் 140 கப்பல்கள் கடந்து சென்ற ஹார்முஸ் ஜலசந்தியில், தற்போது போக்குவரத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் வெறும் மூன்று கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்துள்ளன. பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்த மோதலால் சர்வதேச எரிசக்தி விநியோகம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. ஈரானியப் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் அமெரிக்கக் கடற்படை என இருதரப்பும் மாறி மாறி விதித்துள்ள முற்றுகையால் இந்த வழித்தடம் ஒரு போர்க்களம் போலவே காட்சியளிக்கிறது.
போர்நிறுத்த நீட்டிப்பு
போர்நிறுத்த நீட்டிப்பும் பாகிஸ்தானின் மத்தியஸ்தமும்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய அரசாங்கம் தற்போது பிளவுபட்டுள்ளதாகவும், அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த சமாதானத் திட்டத்தைக் கொண்டு வரும் வரை அமெரிக்க ராணுவம் தனது நேரடித் தாக்குதலை நிறுத்தி வைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், ஈரானியத் துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் வெளியேறவும், உள்ளே நுழையவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈரானுடன் ஒரு நிரந்தர ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், அந்த நாட்டின் தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் தகர்க்க அமெரிக்கா தயங்காது என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். "முற்றுகையைத் தொடரவும், எதற்கும் தயாராக இருக்கவும் நான் எனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.