LOADING...
'இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை': ஈரான் அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்

'இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை': ஈரான் அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 13, 2026
09:23 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும், அமெரிக்காவைப் பொறுத்தவரை தங்களுக்கு பாதிப்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்து திரும்பிய அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்புகிறதா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்கள் வராவிட்டாலும் எனக்கு சம்மதமே. என்ன நடந்தாலும் இறுதியில் அமெரிக்காவிற்கே வெற்றி" என்று குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை தோல்வி

அணு ஆயுத விவகாரமும் அமெரிக்காவின் நிபந்தனையும்

இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததற்கு ஈரானின் பிடிவாதமே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஜே.டி. வான்ஸ் கூறுகையில், "ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முற்படாது என்பதற்கான உறுதியான வாக்குறுதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அணு ஆயுதம் தயாரிப்பதற்கான கருவிகளையோ அல்லது தொழில்நுட்பத்தையோ அவர்கள் கையாள மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும்," என்று தெரிவித்தார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் இன்னும் உறுதியாக இருப்பது தெளிவாக தெரிவதாகவும், ஆனால் ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ்

ஹார்முஸ் நீரிணை மற்றும் எரிசக்தி சந்தை

இந்த பேச்சுவார்த்தை தோல்வியால், இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை திறந்து உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழுவுடன் அமெரிக்கத் தூதுக்குழு விரிவாக விவாதித்த போதிலும், லெபனானில் ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் நிபந்தனைகள் காரணமாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மறுபுறம், ஈரானிய அதிபர், தனது நாடு ஒரு "சமமான மற்றும் நியாயமான" ஒப்பந்தத்தை எட்டத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்குமா அல்லது பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமா என்ற கேள்வி சர்வதேச சமூகளிடையே எழுந்துள்ளது.

Advertisement