LOADING...
ஈரானின் கச்சா எண்ணெய் மையத்தை கைப்பற்றுகிறதா அமெரிக்கா? அதிபர் டிரம்ப்பின் 'கார்க் தீவு' திட்டம்
கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

ஈரானின் கச்சா எண்ணெய் மையத்தை கைப்பற்றுகிறதா அமெரிக்கா? அதிபர் டிரம்ப்பின் 'கார்க் தீவு' திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 30, 2026
08:33 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு ஆசியாவில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில், ஈரானின் கச்சா எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதே தனது முதன்மையான விருப்பம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். "ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை கைப்பற்றுவது எங்களுக்கு மிகவும் எளிதான காரியம். அங்கு அவர்களுக்கு பலமான பாதுகாப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களிடம் பல ராணுவத் திட்டங்கள் உள்ளன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ குவிப்பு

ராணுவ குவிப்பு மற்றும் பாதிப்புகள்

இந்த திட்டத்திற்காக சுமார் 10,000 சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களை அனுப்ப பென்டகன் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 3,500 வீரர்கள் அப்பகுதிக்கு சென்றடைந்துள்ள நிலையில், மேலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் விரைந்துள்ளனர். இந்த போர் சூழலால் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 116 டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50% உயர்வாகும்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தையும் நிபந்தனைகளும்

ராணுவ தாக்குதல்கள் ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் மூலமாக ஈரானுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும், இல்லையெனில் அதன் எரிசக்தி கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அவர் கெடு விதித்துள்ளார். ஈரானின் தற்போதைய தலைமை 'தொழில்முறை ரீதியாக' செயல்படுவதாகவும், அதன் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கலாம் என்றும் ட்ரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார். அதே சமயம், கார்க் தீவு மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்க வீரர்களுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் ராணுவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement