LOADING...
"கண்டதும் சுட உத்தரவு!": ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்பின் அதிரடி!
சந்தேகத்திற்குரிய படகுகளைக் கண்டதும் சுட அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

"கண்டதும் சுட உத்தரவு!": ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்பின் அதிரடி!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2026
06:56 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்கும் சந்தேகத்திற்குரிய படகுகளைக் கண்டதும் சுட அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சர்வதேச கடல்வழி வர்த்தகப் பாதையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு சிறிய படகையும் கண்டதும் சுடவும், அந்த நபர்களைக் கொல்லவும் அமெரிக்கக் கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் எவ்வித தயக்கமும் இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஈரானின் 159 கடற்படைக் கப்பல்கள் கடலுக்கு அடியில் இருப்பதாக கூறியுள்ள அவர், எஞ்சியிருக்கும் அச்சுறுத்தல்களை அகற்ற ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

கண்ணிவெடி

மும்மடங்காகும் கண்ணிவெடி அகற்றும் பணிகள்

ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் (Mine-sweeping operations) தற்போது நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகளை மும்மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்தவும் டிரம்ப் ஆணையிட்டுள்ளார். இந்த மிக முக்கியமான வர்த்தக வழித்தடம் மூடப்பட்டிருப்பது சர்வதேச எரிசக்தி சந்தையைப் பாதிக்கும் என்பதால், அதை விரைவில் திறக்க அமெரிக்கா இத்தகைய கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

அமெரிக்க ராணுவம்

கடலில் தொடரும் அதிரடி வேட்டை

டிரம்பின் இந்த அறிவிப்பு ஒருபுறமிருக்க, அமெரிக்க ராணுவம் ஈரானிய எண்ணெய் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் 'M/T Majestic X' என்ற கப்பலை நள்ளிரவில் சுற்றி வளைத்துக் கைப்பற்றியதாகப் பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீற முயன்ற 'டோரினா' என்ற ஈரானுடன் தொடர்புடைய மற்றொரு கப்பலை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று வழிமறித்துப் பாதுகாப்பாக இழுத்துச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், கடல் பகுதியில் நிலவும் இந்த 'நேருக்கு நேர்' மோதல் போக்கு எரிபொருள் விலையை மேலும் உயர்த்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement