LOADING...
பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் மோதலுக்கும் தயார்; ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த சிக்னல்
அயதுல்லா கமேனியை சந்திக்க டொனால்ட் டிரம்ப் விருப்பம்

பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் மோதலுக்கும் தயார்; ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த சிக்னல்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 15, 2026
01:34 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி விரும்பினால், அவரைச் சந்திக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உலகளாவிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நேரடிப் பேச்சுவார்த்தையே சிறந்த வழி என்று டிரம்ப் கருதுவதாகவும், ஒருவரை சந்திப்பதன் மூலம் அமெரிக்கா அடிபணிந்து விட்டதாக அர்த்தமல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ராணுவக் குவிப்பு

ஒருபுறம் அமைதி.. மறுபுறம் ராணுவக் குவிப்பு

ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும், ராணுவ ரீதியாக அமெரிக்கா தனது பிடியைத் தளர்த்தவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது கப்பலையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதிலும், அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதல்களை முறியடிப்பதிலும் அந்நாடு உறுதியாக உள்ளது. "அமைதியையே விரும்புகிறோம், ஆனால் எங்களைத் தாக்கினால் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளோம்" என்பதே அமெரிக்காவின் தற்போதைய செய்தியாக உள்ளது.

தூதர்கள்

புதிய டீல் மற்றும் தூதர்களின் வருகை

ஈரானுடன் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தைச் செய்ய டிரம்ப் ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் விரைவில் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜெனீவாவில் ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. "பேச்சுவார்த்தை மூலம் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதே அதிபரின் விருப்பம்" என்று மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தாக்கம்

நட்பு நாடுகளின் உறவும் சீனாவின் தாக்கமும்

கனடா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் சமீபத்தில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது குறித்தும் ரூபியோ கருத்து தெரிவித்துள்ளார். ஜெர்மன் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் சீனா செல்லவிருக்கும் நிலையில், இது மேற்கத்திய நாடுகளின் கூட்டணி பலவீனமடைவதைக் குறிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். பெரும் வல்லரசு நாடுகள் தங்களுக்குள் பேசித் தேவையற்ற மோதல்களைத் தவிர்ப்பது ஒரு சாதாரணமான மற்றும் அவசியமான விஷயம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட விரைவில் சீனா செல்லத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த அதிரடி மாற்றங்கள் ஈரானின் அணுசக்தி கொள்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement