LOADING...
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% அபராத வரி! இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புதிய நெருக்கடி
அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளார்

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% அபராத வரி! இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புதிய நெருக்கடி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2026
08:06 am

செய்தி முன்னோட்டம்

ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளார். இதன்படி, ஈரானுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும்போது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இதனை பதிவிட்டுள்ள டிரம்ப், "இந்த உத்தரவு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது" எனத் தெரிவித்துள்ளார். இந்த அதிரடி முடிவானது இந்தியா, சீனா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஈரானின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுக்கும், அமெரிக்காவுடனான அவர்களது உறவிற்கும் பெரும் சவாலாக அமையக்கூடும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

போராட்டம்

ஈரானில் ஆளும் அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி

ஈரானில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 648 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஒருபடி மேலே சென்று, ஈரானியத் தலைவர்களைக் குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரம்பை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், "அரசு எப்போதும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கே முன்னுரிமை அளிக்கும்" என்றார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்காவுடன் ரகசியத் தொடர்புகள் நீடிப்பதாகக் கூறினாலும், அமெரிக்காவின் மிரட்டல் தொனி சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 1979-க்குப் பிறகு ஈரான் அரசு சந்திக்கும் மிகப்பெரிய உள்நாட்டு நெருக்கடியாக இது பார்க்கப்படுகிறது.

Advertisement