LOADING...
பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்
டிரம்ப் இவ்வாறு இளவரசரை ஆதரித்து பேசியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் தொடர்பில்லை: உளவுத்துறையின் அறிக்கையை நிராகரித்த டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2025
10:11 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை(MBS), பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் சம்மந்தமில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த கொலையை திட்டமிட்டது இளவரசரே என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்த வந்த பின்னரும், டிரம்ப் இவ்வாறு இளவரசரை ஆதரித்து பேசியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கருத்து

டிரம்ப்பின் ஆதரவு கருத்து

வெள்ளை மாளிகையில் இளவரசர் முகமது பின் சல்மானை வரவேற்றபோது நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில், கஷோகி கொலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு டிரம்ப் உடனடியாகக் குறுக்கிட்டார். "நீங்கள் போலிச் செய்திகளை சொல்கிறீர்கள்," என்று செய்தியாளரை நோக்கி சீறிய டிரம்ப், "நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் (கஷோகி) மிகவும் சர்ச்சைக்குரியவர். அவரைப் பலருக்குப் பிடிக்கவில்லை". "நீங்கள் அவரை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால், பட்டத்து இளவரசருக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. இதோடு இதை விட்டுவிடலாம். இதுபோன்ற கேள்வியை கேட்டு நமது விருந்தினரை நீங்கள் சங்கடப்படுத்த வேண்டாம்" என்று கூறி இளவரசரை ஆதரித்து பேசினார்.

பதில்

இளவரசரின் பதில்

கஷோகியின் மரணம் குறித்து இளவரசர் முகமது பின் சல்மான் பதிலளிக்கையில், "இந்தச் சம்பவம் வேதனையானது. எந்தவொரு உண்மையான காரணமும் இல்லாமல் அல்லது சட்டவிரோதமாக ஒருவரின் உயிரைப் பறிப்பதைப் பார்ப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க எங்கள் அமைப்பை மேம்படுத்தியுள்ளோம். இது வேதனை அளிக்கும் ஒரு பெரிய தவறு," என்று தெரிவித்தார். 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய அறிக்கையில், ஜமால் கஷோகியின் கைது அல்லது கொலையை இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் டிரம்ப் அமெரிக்க உளவுத்துறையின் முடிவுகளை வெளிப்படையாக நிராகரித்து, சவுதி இளவரசருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.