வெள்ளை மாளிகைக்குள் நுழைய சிஎன்என், எம்எஸ் நௌ, பாலிடிகோ ஊடகங்களுக்கு டிரம்ப் தடை; காரணம் இதுதான்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிஎன்என், எம்எஸ் நௌ, மற்றும் பாலிடிகோ ஆகிய பிரபல செய்தி ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பொய்யான செய்திகளையும் போலி அறிக்கைகளையும் வெளியிடுவதாகக் குற்றம்சாட்டி, இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்துவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் செய்தி சேகரிக்க அந்த ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை முடக்கம்
எம்எஸ் நௌ பத்திரிகையாளரின் நுழைவு அடையாள அட்டை முடக்கம்
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து சனிக்கிழமை (செப்டம்பர் 19) காலை செய்தி சேகரிக்க வந்த எம்எஸ் நௌ ஊடகத்தின் வெள்ளை மாளிகை நிருபர் அகைலா கார்ட்னர் நுழைவு வாயிலில் வைத்துத் திருப்பி அனுப்பப்பட்டார்.
அவரது அடையாள அட்டை முடக்கப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் புகைப்படக் கலைஞரின் அடையாள அட்டையும் முடக்கப்பட்ட நிலையில், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் வெள்ளை மாளிகைக்குள் சுதந்திரமான பத்திரிகை உரிமையைப் பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் குற்றச்சாட்டு
டிரம்பின் குற்றச்சாட்டுகளும் ஓவல் அலுவலகப் பேட்டியும்
தமது நிர்வாகத்தைப் பற்றி தொடர்ந்து எதிர்மறையான மற்றும் போலிச் செய்திகளை வெளியிடுவதால் இந்த முடிவை எடுத்ததாக ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் நியாயப்படுத்தினார்.
"நாட்டிற்கு உண்மையான செய்திகள் மட்டுமே தேவை.
தொடர்ச்சியாகப் போலிச் செய்திகளைப் பரப்புபவர்களை விலக்கி வைக்க அதிபருக்கு உரிமை உண்டு." என்றும் அவர் கூறினார்.
மேலும் வரும் நாட்களில் இந்தத் தடைப் பட்டியலில் இன்னும் சில ஊடகங்கள் இணையக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரம்
அரசியலமைப்பு சட்டம் மற்றும் பத்திரிகை சுதந்திரப் போராட்டம்
டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்க பத்திரிகை சுதந்திரம் மற்றும் முதலாவது அரசியலமைப்பு சட்டத் திருத்தப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அசோசியேட்டட் பிரஸ் நிறுவன நிருபர்களுக்கும் டிரம்ப் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தடைச் சட்டம் நீதிமன்றத்தில் நீடிக்காது என சுதந்திர அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கம் இதற்குப் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.