'எனக்கு இது புதிய செய்தி!' டொனால்ட் டிரம்பின் எனர்ஜி போர்நிறுத்த அறிவிப்புக்கு உக்ரைன் அதிபர் நெத்தியடி பதில்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் எனர்ஜி போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ள டிரம்ப், இரு நாடுகளும் இந்த உடன்படிக்கையை மீறக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதற்கான காலக்கெடுவையோ அல்லது அமல்படுத்தும் முறைகளையோ அவர் விரிவாகக் குறிப்பிடவில்லை.
ஜெலென்ஸ்கி பதிலடி
"எனக்கு இது புதிய செய்தி" - ஜெலென்ஸ்கி பதிலடி
டிரம்பின் இந்தத் திடீர் அறிவிப்பு குறித்துப் பேசிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த அறிவிப்பு தனக்கு முற்றிலும் புதிய செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ரஷ்யா உக்ரைனின் ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்த உக்ரைன் தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.
ரஷ்யா ஒப்புக்கொண்டால், இந்த போர்நிறுத்தம் எப்போது தொடங்குகிறது என்பதை டிரம்ப் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
விவாதம்
புதிய தலைமை மற்றும் தேர்தல் குறித்த காரசார விவாதம்
முன்னதாக, ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் செய்யத் தவறுவதாகக் கூறி, உக்ரைனுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, "அதிபர் டிரம்பிற்கு உரிய மரியாதையுடன் சொல்கிறேன்.
எங்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது உக்ரைன் மக்களின் உரிமை." என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் தேர்தல்களை நடத்த ஏதுவாக புடினிடம் பேசி 60 நாட்கள் முழுமையான போர்நிறுத்தத்தை ஏற்படுத்தித் தருமாறு டிரம்பிற்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
உக்ரைன் எதிர்ப்பு
டீசல் ஒப்பந்தமும் உக்ரைனின் எதிர்ப்பும்
ரஷ்யா மீதான சில பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்குப் பதிலாக, உலக சந்தைக்கு ரஷ்யா டீசல் விநியோகம் செய்ய டிரம்ப் சமீபத்தில் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தை பலவீனமான முடிவு என விமர்சித்த ஜெலென்ஸ்கி, இது உக்ரைன் மீதான தாக்குதலை அதிகரிக்க ரஷ்யாவிற்கு வழிவகுக்கும் எனக் கவலை தெரிவித்தார்.
ஆனால், எரிபொருள் விலை உயர்வுக்கு உக்ரைனின் நடவடிக்கைகளே காரணம் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.