"ஈரானை கற்காலத்திற்கு மாற்றுவோம்": அடுத்த 3 வாரங்களில் கடும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், அதன் பிறகு இந்தப் போர் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய ட்ரம்ப், "நாங்கள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்" என்று எச்சரித்தார். "ஈரானை அவர்கள் இருக்க வேண்டிய இடமான கற்காலத்திற்கே நாங்கள் கொண்டு செல்வோம். அடுத்த சில வாரங்களில் அவர்கள் மீது மிகவும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்," என்று கூறினார். ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் தங்களின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்றும், தேவைப்பட்டால் அவற்றைத் தகர்க்கத் தயங்கமாட்டோம் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
.@POTUS addresses the nation: "Tonight, Iran's navy is gone, their air force is in ruins, their leaders, most of them... are now dead. Their command and control of the Islamic Revolutionary Guard Corps is being decimated as we speak, their ability to launch missiles and drones is… pic.twitter.com/3VOa2gM9ct
— Rapid Response 47 (@RapidResponse47) April 2, 2026
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி குறித்த கருத்து
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி குறித்துப் பேசிய ட்ரம்ப், "அமெரிக்காவிற்கு ஹார்முஸ் ஜலசந்தி தேவையில்லை. போர் முடிந்தவுடன் அது தானாகவே திறந்து கொள்ளும்" என்று கூறினார். மேலும், அமெரிக்காவை ஆதரிக்காத நாடுகளை "துரோகிகள்" எனச் சாடிய அவர், அந்த நாடுகள் இனி அமெரிக்காவிடமிருந்து தான் எரிபொருளைப் பெற வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார். உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கிய ட்ரம்ப், "எங்களின் எரிசக்தித் தேவைகளுக்கு நாங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்து இல்லை. எண்ணெய் தேவைப்படும் நாடுகள் அமெரிக்காவிடம் வாங்கிக் கொள்ளலாம் அல்லது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜலசந்திக்குச் சென்று தங்களுக்குத் தேவையானதைப் பறித்துக் கொள்ளலாம்," என்று கிண்டலாக கூறினார்.
எரிசக்தி
வெனிசுலா மற்றும் எரிசக்தி சுதந்திரம்
அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் மிக விரைவாகவும், துல்லியமாகவும் தனது நடவடிக்கையை முடித்திருப்பதைப் பாராட்டிய ட்ரம்ப், தற்போது அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் எரிசக்தித் தேவையைச் சார்ந்து இல்லை என்று கூறினார். வெனிசுலாவின் பரந்த எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இப்போது எரிசக்தித் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இறுதி இலக்கு
அமெரிக்காவின் இறுதி இலக்கு
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்பதே அமெரிக்காவின் இறுதி இலக்கு என்று குறிப்பிட்ட ட்ரம்ப், வளைகுடா நாடுகளில் உள்ள தனது நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பையும் அமெரிக்கா வழங்கும் என்று உறுதியளித்தார். ஈரானின் கடற்படை ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் விமானப்படை சிதைந்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத்துவம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு மற்றும் தாக்குதல் திறனை முழுமையாக அழிப்பதும் ஒரு இலக்கு என கூறினார். ராணுவத் தாக்குதல்கள் ஒருபுறம் இருந்தாலும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.