இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை
சீசன் நெருங்கி வருவதால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் பயணிகளுக்கான விசா தேவைகளை அடுத்த மாதம் தொடங்கி மே 2024 வரை தற்காலிகமாக நீக்குவதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. தாய்லாந்து சுற்றுலாத்துறைக்கு கிடைக்கும் வருமானத்தில் சராசரியாக 4இல் 1 பங்கு சீன சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து தான் கிடைக்கிறது. அதனால், கடந்த மாதம் சீன சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவைகளை தாய்லாந்து ரத்து செய்தது. இந்நிலையில், இந்தியா மற்றும் தைவான் சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவைகளையும் தற்காலிகமாக தாய்லாந்து ரத்து செய்துள்ளது.
10 மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வருமானம்
இந்தியா மற்றும் தைவானில் இருந்து வருபவர்கள் 30 நாட்களுக்கு தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் என்று தாய்லாந்து செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே தெரிவித்துள்ளார். சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி, இந்த வருடம் ஜனவரி முதல் அக்டோபர் மாதத்திற்கு இடையே 22 மில்லியன் சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். இதன் விளைவாக அந்நாட்டுக்கு 927.5 பில்லியன் பாட்(2.14 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்) வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருடம் இதுவரை அதிகமான மலேசியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர் என்கிறது தரவுகள். அக்டோபர் மாதம் வரை 3 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை(2.65 மில்லியன்) உள்ளது.