மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கான திருத்தப்பட்ட பயண ஆலோசனையில், வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய தகவல்களை பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. "குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளது," என்று அது கூறியது. ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பு தரவு நிலை 2 இல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் பல பகுதிகள்- ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, மணிப்பூர் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மட்டும் நிலை 4-இல் வைக்கப்பட்டுள்ளன.
அச்சுறுத்தல் இருப்பதால் பயணம் வேண்டாமென கூறுகிறது அமெரிக்கா
"பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் (கிழக்கு லடாக் பகுதி மற்றும் அதன் தலைநகரான லே தவிர) பயணம் செய்ய வேண்டாம். மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில், பயங்கரவாதம் மற்றும் மணிப்பூர் வன்முறை மற்றும் குற்றச்செயல்கள் அச்சுறுத்தல் உள்ளது" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இவ்விடங்களுக்கு, பயணம் செய்வதை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்தது. "கற்பழிப்பு என்பது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்றாகும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தளங்களிலும் பிற இடங்களிலும் நடந்துள்ளன" என்றும் பயண ஆலோசனை எச்சரிக்கிறது.