LOADING...
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்; இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்; இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
08:00 am

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான், இன்று (பிப்ரவரி 17) அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கிறார். 60 வயதான தாரிக் ரஹ்மான், 1991-ஆம் ஆண்டிற்கு பிறகு வங்கதேசத்தின் பிரதமராக பொறுப்பேற்கும் முதல் ஆண் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். வழக்கமான நடைமுறைகளை தவிர்த்து, இந்த முறை பதவியேற்பு விழா அதிபர் மாளிகையான பங்காபவனிற்கு பதிலாக, நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசாவில் நடைபெறுகிறது. இன்று மாலை 4:00 மணியளவில் நடைபெறும் இவ்விழாவில், அதிபர் முகமது சஹாபுதீன் புதிய பிரதமருக்கும், அவரது அமைச்சரவைக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். முன்னதாக இன்று காலை 10:00 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) பதவியேற்கின்றனர்.

தலைவர்கள்

பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ள தலைவர்கள்

இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான ராஜதந்திர உறவை வலுப்படுத்தும் நோக்கில், இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா கலந்துகொள்கிறார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவருடன் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதவிர, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இலங்கை மற்றும் துருக்கி நாடுகளின் பிரதிநிதிகளும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 297 இடங்களில் 209 இடங்களை BNP கட்சி கைப்பற்றி ஆட்சியை உறுதி செய்தது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு அண்டை நாடுகளுடன் எத்தகைய உறவை பேணப்போகிறது என்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.

Advertisement