ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்
ஒரே பாலின தம்பதிகள் இணைந்து குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை தைவான் பாராளுமன்றம் இன்று(மே 16) நிறைவேற்றியது. இது திருமண சமத்துவத்தை நோக்கிய மிகப்பெரும் படியாக பார்க்கப்படுகிறது. LGBTQ சமூகத்திற்கு பாதுகாப்பான நாடாக தைவான் மாறி வருகிறது. தைவான் 2019இல் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. ஆசியாவிலேயே திருமண சமத்துவம் உள்ள ஒரே நாடு தைவான் மட்டுமே. எனினும், ஒரே பாலின தம்பதிகள் இணைந்து குழந்தைகளை தத்தெடுக்க தைவான் சட்டம் இதுவரை அனுமதிக்கவில்லை. இந்தியாவை போலவே தைவானிலும், ஒரு தனிநபரால் குழந்தைகளை தத்தெடுக்க முடியும். ஒரே பாலின உறவில் இருக்கும் ஒருவர் தனியாக ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிந்தாலும், சட்டபூர்வமாக அந்த தம்பதிகளில் ஒருவர் மட்டுமே பெற்றோராக இருக்கமுடியும்.
திருமண சமத்துவம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம்
இந்நிலையில், செவ்வாயன்று, தைவானின் திருமண சமத்துவச் சட்டத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடாளுமன்றம் அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற எதிர் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. "குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் சிறந்த நலனையும் இந்த சட்ட திருத்தம் பூர்த்தி செய்கிறது" என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் சமீபத்தில் திருமண சமத்துவம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. ஆனால், இதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மனுக்களின் விசாரணையின் போது, திருமண சமத்துவம், குழந்தைகள் தத்தெடுப்பு, செயற்கை கருத்தரிப்பு போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.