சிட்னி பாண்டி கடற்கரை தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 16 என உயர்வு; தந்தை-மகன் இணைந்து நடத்திய துப்பாக்கி சூடு?
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், நேற்று யூத பண்டிகையான ஹனுக்காவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 40 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இத்தாக்குதல் யூதர்களுக்கு எதிரான தீவிரவாதச் செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹனுக்கா பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த யூத சமூகத்தினரை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்.
விபரம்
குற்றவாளிகள் விபரம்
இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நபர்கள், தந்தை மற்றும் மகன் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சஜித் அக்ரம் (50) என்ற தந்தை, சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நவீத் அக்ரம் (24) என்ற மகன், படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்து போன சஜித் அக்ரம் துப்பாக்கி உரிமம் பெற்றவர் என்றும் சட்டப்பூர்வமாக பல ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் விசாரணை அதிகாரி லான்யன் கூறினார். தாக்குதலுக்குப் பிறகும் அதைத் தொடர்ந்து வந்த போலீஸ் நடவடிக்கைகளிலும் ஆறு துப்பாக்கிகள் மீட்கப்பட்டதையும் லான்யன் உறுதிப்படுத்தினார். தாக்குதலில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதுடன், குற்றவாளிகளில் ஒருவரது வாகனத்தில் வெடிகுண்டுகளும் (IEDs) கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.