Loading...
ஃபேஸ்புக் பதிவால் சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இலங்கை வாலிபர்: காப்பாற்றத் துடிக்கும் குடும்பம்
ஃபேஸ்புக் பதிவால் சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இலங்கை வாலிபர்

ஃபேஸ்புக் பதிவால் சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இலங்கை வாலிபர்: காப்பாற்றத் துடிக்கும் குடும்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
12:46 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கையை சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜன் எனும் தமிழ் புலம்பெயர் தொழிலாளி, சவூதி அரேபியாவில் ஃபேஸ்புக் பதிவொன்றில் மத விவாதத்தின் போது பதிவிட்ட கருத்துக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இலங்கையில் நடைபெற்ற இந்து வழிபாட்டு நிகழ்வின் போது, நாய் ஒன்றை இளைஞர் ஒருவர் உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மத மோதலாக மாறியது. இவ்விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து அனோஜன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு, பின்னர் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டார்.

கைது

சமூக வலைதள விவாதமும் சவூதியில் கைதும்

எனினும், அப்பதிவின் ஸ்கிரீன்ஷாட்களை சவூதியில் உள்ள அனோஜன் பணிபுரியும் நிறுவனத்திற்கு அனுப்பி சிலர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சவூதி அதிகாரிகள் அனோஜனைக் கைது செய்து, ஜூலை 15 அன்று அல்-அஹ்சா நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதம் விதித்தனர்.

இத்தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை சவூதி அரசு வழக்கறிஞர்கள் எதிர்த்தனர்.

இணையவழிக் குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக ஷரியா சட்டத்தின் கீழ் அனோஜன் மீது வழக்குத் தொடர அவர்கள் வலியுறுத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், செப்டம்பர் 17 அன்று அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 28 முதல் அனோஜன் குடும்பத்தினருடன் பேசுவது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

முயற்சிகள்

அரசதந்திர ரீதியிலான முயற்சிகள்

அனோஜனின் தாய் யோகலட்சுமி மற்றும் குடும்பத்தினர் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து மகனைக் காப்பாற்ற கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அசார்ட் நவாவி தலைமையிலான 4 பேர் கொண்ட சட்டக் குழு சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சவூதி அரேபியா செல்கிறது.

இலங்கைத் தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும் பௌத்த, இந்து மதத் தலைவர்கள் சவூதி அரசிற்கும் இலங்கை அரசுக்கும் கருணை மனுக்களை அனுப்பியுள்ளனர்.

குடும்பத்திற்கு ஆதரவாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரார்த்தனைகளும், கையெழுத்துப் இயக்கங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT