சவுதியில் இலங்கை தமிழருக்கு மரண தண்டனை? பிரதமர் மோடி தலையிட்டு மீட்க இலங்கை எம்பி வேண்டுகோள்
செய்தி முன்னோட்டம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனோஜன் சிவராசா என்ற தமிழ் இளைஞர் வேலைவாய்ப்பிற்காக ஒன்பது மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். அங்கு சமூக வலைத்தளத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பதிவிட்டதாகக் கூறி அவருக்கு முதலில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தத் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் தலையீட்டைக் கோரும் இலங்கை எம்பி
இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட வேண்டும் என இலங்கைத் தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், "பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, அவர் மூலம் சவுதி இளவரசரிடம் பேசி அனோஜனைக் காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
<Appeal to President> I urge President @anuradisanayake to bring #Anojan_Sivarasa’s desperate plight to the urgent attention of your friend, recipient of "SriLanka Rathna" Prime Minister Narendra Modi.
— Mano Ganesan (@ManoGanesan) September 19, 2026
Given PM Modi’s close ties with Saudi Prime Minister and Crown Prince… pic.twitter.com/4wFbn1RoZh
இலங்கை அரசு
இலங்கை வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ விளக்கம்
அனோஜன் சிவராசாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து சவுதி நீதித்துறை இன்னும் அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வத் தீர்ப்பை வழங்கவில்லை என ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தூதரகம் தேவையான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மேலும் கூறியுள்ளது.
மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் உள்ளதால், சவுதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனோஜனின் குடும்பத்தினருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.