ஸ்பெயின் ரயில் விபத்தில் 69 பேர் பலியானதன் எதிரொலியாக வெடித்த போராட்டம்: அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி
செய்தி முன்னோட்டம்
ஸ்பெயினில் மாட்ரிட்டில் இருந்து செவீயா நோக்கிச் சென்ற அதிவேக ரயில் நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதிய கோர விபத்தில் குறைந்தது 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலரும் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய நவீன வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய ரயில் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பெயின் முழுவதும் மூன்று நாட்கள் தேசிய இரங்கல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு அறைத் தவறு
கட்டுப்பாட்டு அறைத் தவறுகளும் ஆடியோ வெளியீடும்
மாட்ரிட் ரயில் கட்டுப்பாட்டு மையத்திற்கும், ஓட்டுநர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் ஆடியோ பதிவுகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கணினி பழுது காரணமாக சிக்னல் அமைப்பு முற்றிலுமாக முடங்கியிருந்த நிலையில், முன்னால் நின்று கொண்டிருந்த ஐரியோ ரயிலை முந்திச் செல்ல ரென்ஃபே ரயிலுக்கு கட்டுப்பாட்டு அறை சாதாரண வேகத்தில் இயங்க அனுமதி அளித்துள்ளது.
எந்தவிதமான வேகக் கட்டுப்பாடுகளும் இன்றி ரயில்களை இயக்கக் உத்தரவிட்டது "விளக்கமளிக்க முடியாதது" என ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்
இந்த விபத்து நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு மீதான கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே ஆகியோர் பதவி விலகக் கோரி, தலைநகர் மாட்ரிட்டில் உள்ள போக்குவரத்து அமைச்சக அலுவலகம் முன்பு சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் அமைச்சக கட்டிடத்தை நோக்கிப் பட்டாசுகள் மற்றும் பாட்டில்களை வீசியதை அடுத்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
ரயில்வே பாதுகாப்பை வலியுறுத்தி நாட்டின் இரயில் ஓட்டுநர்கள் சங்கம் (Semaf) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.