சவதி அரேபிய விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!
விண்வெளிச் சுற்றுலாவாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ரய்யனா பர்னவி, சவுதி அரேபியாவைச் சேர்ந்த போர் விமானியான அலி அல்-கார்னி ஆகியோருடன் முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விண்ஸ்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜான் ஷாஃப்னர் ஆகியோருடன் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது ஸ்பேஸ்எக்ஸின் ராக்கெட். இதனைத் தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற முதல் சவுதி அரேபியப் பெண் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் ரய்யனா பர்னவி. மேலும், 1985-க்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் சவுதி அரேபியர்கள் இவர்கள் தான்.
விண்வெளிச் சுற்றுலா:
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.07 மணிக்கு அமெரிக்காவின் கேப் கார்னிவல்லில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து ஸ்பேஸ்எக்ஸிந் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நால்வர் கொண்ட குழு இன்று காலை கேப்சூல் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்திருக்கும். இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துவிட்டு பின்னர் ஃப்ளோரிடா கடற்கரையில் தரையிறங்கவிருக்கின்றனர். இவர்களின் இந்த பயணத்திற்கான டிக்கெட் மதிப்பு எவ்வளவு என அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனினும், ஒரு இந்த 10 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு ஒரு நபருக்கு 55 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 450 கோடி ரூபாய்) என முன்னர் குறிப்பிட்டிருந்தது அந்நிறுவனம்.