Page Loader
1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும் என்று யாங்பியோங்கில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி

எழுதியவர் Sindhuja SM
Mar 09, 2023
10:40 am

செய்தி முன்னோட்டம்

தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 1000 நாய்கள் இறந்து கிடந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் இந்த நாய்களை பட்டினி போட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "கைவிடப்பட்ட நாய்களை அழைத்து சென்று அவைகளை இறக்கும் வரை பட்டினி போட்டதாக" குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தென்கொரிய காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இனப்பெருக்க வயதைக் கடந்த நாய்கள் பணம் கொடுத்து கொல்லப்பட்டதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் கூறி இருக்கின்றனர். மேலும், நாய்களை "உற்பத்தி" செய்து விற்கும் உரிமையாளர்கள் தான் இந்த காரியத்தை செய்ய சொல்லி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தென் கொரியா

சித்திரவதையில் இருந்து தப்பி சிகிச்சை பெற்று வரும் நாய்கள்

2020ஆம் ஆண்டு முதல், நாய் ஒன்றை "கவனித்து கொளவதற்கு" அவருக்கு 10,000 வோன்(620 ரூபாய்) வழங்கப்பட்டதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தன் தொலைந்த நாயை தேடி கொண்டிருந்த ஒரு நபர் இதை கண்டறிந்து காவல்துறையில் புகாரளித்துள்ளார். நாய்களின் சிதைந்த சடலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன என்றும், பட்டினியால் வாடிய நாய்கள் கூண்டு, சாக்கு, ரப்பர் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் செய்திகள் கூறுகின்றன. இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும் என்று யாங்பியோங்கில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நான்கு நாய்கள் மட்டும் இந்த சித்திரவதையான சூழ்நிலையில் இருந்து தப்பித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.