அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா
பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்துவதால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. 2023-2027 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில், இதுவரை பதிவு செய்யப்படாத அளவு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதன்கிழமையன்று உலக வானிலை அமைப்பு(WMO) வெளியிட்ட புதிய அப்டேட்டின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக வெப்ப நிலைகள் வரலாறு காணாத அளவு உயரும். பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் இயற்கையாக நிகழும் எல் நினோ வானிலை முறை ஆகியவற்றால் இந்த வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படுகிறது. இதுவரை வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்தது, 2015 மற்றும் 2022க்கு இடையிலான காலகட்டத்தில் தான். ஆனால், காலநிலை மாற்றம் துரிதப்படுத்தப்படுவதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது
"அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது ஒட்டுமொத்த ஐந்தாண்டு காலமும், இதுவரை பதிவு செய்யப்படாத அளவு வெப்பம் அதிகரிக்க 98 சதவீத வாய்ப்பு உள்ளது" என்று WMO கூறியுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையானது, 1850 மற்றும் 1900க்கு இடையில் அளவிடப்பட்ட சராசரி அளவை விட இரண்டு டிகிரி செல்சியஸுக்கும் கீழ் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. 2022 இல் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1850-1900க்கு இடையில் அளவிடப்பட்ட சராசரியை விட 1.15 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. 2023-2027 ஆண்டுகளில், உலக வெப்பநிலை 1850-1900க்கு இடையில் அளவிடப்பட்ட சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க 66% வாய்ப்புள்ளதாக WMO கூறியுள்ளது.