காணாமல் போய் 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்; கண்டுபிடிப்பிற்கு உதவிய டிஎன்ஏ சோதனை
லூயிஸ் அர்மாண்டோ அல்பினோ 1951இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். அப்போது அவருக்கு 6 வயது. இந்த சம்பவம் நடந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில், ஆன்லைன் வம்சாவளி சோதனை, பழைய புகைப்படங்கள் மற்றும் செய்தித்தாள்களில் அப்போது வெளியான செய்திகளின் மூலம் மீண்டும் தனது குடும்பத்தை கண்டுபிடித்துள்ளார். ஓக்லாந்தில் உள்ள அல்பினோவின் மூத்த சகோதரரின் மகள் போலீஸ், எஃப்பிஐ மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் உதவியுடன் கிழக்கு கடற்கரையில் வசிக்கும் சித்தப்பாவை கண்டுபிடித்துள்ளார். அல்பினோ ஒரு ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் மற்றும் வியட்நாமில் பணியாற்றிய மரைன் கார்ப்ஸிலும் இருந்துள்ளார் என்று அவரது அண்ணன் மகளான 63 வயதான அலிடா அலெக்வின் கூறியுள்ளார்.
ஆறு வயதில் கடத்தப்பட்ட சிறுவன்
பிப்ரவரி 21, 1951 அன்று, ஒரு பெண் 6 வயது அல்பினோவை வெஸ்ட் ஓக்லாண்ட் பூங்காவில் இருந்து தனது மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால், ஏமாற்றி அல்பினோவை கடத்தி கிழக்குக் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு அல்பினோவை ஒரு தம்பதியினர் கண்டெடுத்து தங்கள் சொந்த மகனாக வளர்த்துள்ளனர். இதற்கிடையே, காணாமல் போய் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், அல்பினோவின் சிறுவயது புகைப்படங்கள் இன்னும் அவரது உறவினர் வீடுகளில் இருந்துள்ளன. மேலும், அவரது தாயார் 2005இல் இறக்கும் வரையிலும் தனது மகன் உயிரோடுதான் உள்ளார் என்ற நம்பிக்கையை கைவிடாமலேயே இருந்தார்.
அல்பினோவைக் கண்டுபிடித்தது எப்படி?
தனது சித்தப்பா இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என்பதை 2020இல் வெறும் வேடிக்கைக்காக அலெக்வின் கூறியுள்ளார். மேலும், இதன் அடிப்படையில் அவர் ஆன்லைனில் டிஎன்ஏ பரிசோதனையையும் மேற்கொண்டுள்ளார். யாரும் எதிர்பாராத வகையில், இது ஒரு நபருடன் 22 சதவீத பொருத்தத்தைக் காட்டியது. இதனால் ஆச்சரியமடைந்த குடும்பத்தினர் அந்த நபரை தேட முயற்சித்தும் அப்போது கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அலெக்வினும் அவருடைய மகள்களும் மீண்டும் தேட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து லூயிஸ் அர்மாண்டோவை கண்டுபிடித்தனர். தான் காணாமல் போய் 70 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து அவர் மிகவும் நெகிழ்ச்சியடைந்து விட்டார்.