இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்
சிங்கப்பூர் இந்த வாரம் ஒரு பெண் உட்பட இரண்டு போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண்ணை சிங்கப்பூர் அரசாங்கம் தூக்கிலிட இருக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்களும், உரிமைக் குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சாரிதேவி ஜமானி(45) என்ற பெண் குற்றவாளியை வரும் வெள்ளிக்கிழமை தூக்கிலிட சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. சுமார் 30 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2018இல் சாரிதேவி ஜமானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்ணாக அவர் இருப்பார்
தூக்கிலிடப்பட இருக்கும் இரண்டு கைதிகளும் சிங்கப்பூர்காரர்கள் தான்
இதற்கு முன்னதாக, 2004ஆம் ஆண்டில், சிகையலங்கார நிபுணரான யென் மே வொன்(36) போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். இந்த வாரம், தூக்கிலிடப்பட இருக்கும் இரண்டு கைதிகளும் சிங்கப்பூர்காரர்கள் என்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் உள்ளூர் உரிமைகள் அமைப்பான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்(TJC) தெரிவித்துள்ளது. சாரிதேவிக்கு வரும் வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இந்த வாரம் இன்னொரு நபரும் தூக்கிலிடப்பட உள்ளார். 50 கிராம்(1.76 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபரை, தென்கிழக்கு ஆசிய நகர-மாநிலத்தின் சாங்கி சிறைச்சாலையில் வரும் புதன்கிழமை தூக்கிலிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று TJC தெரிவித்துள்ளது.