Loading...
வெறுப்புப் பேச்சை ஏற்க முடியாது! இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் இனவெறி கருத்துகள்; சிங்கப்பூர் பிரதமர் கடும் கண்டனம்
சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி கருத்துகள்

வெறுப்புப் பேச்சை ஏற்க முடியாது! இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் இனவெறி கருத்துகள்; சிங்கப்பூர் பிரதமர் கடும் கண்டனம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
01:45 pm

செய்தி முன்னோட்டம்

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினரை இலக்கு வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட இனவெறி மற்றும் அந்நிய வெறுப்பு சார்ந்த கருத்துகள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் கே.சண்முகம் ஆகியோர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான பாரபட்சமான கருத்துகளையும் சிங்கப்பூர் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பின்னணி

நேபாள வெள்ள பாதிப்பு மற்றும் ஏர் இந்தியா விவகாரத்தில் எழுந்த சர்ச்சை

ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் மாயமான 9 சிங்கப்பூர் குடிமக்களில் பலர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை சிறுமைப்படுத்தி சிலர் ஆன்லைனில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.

மேலும், டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செய்துள்ள முதலீடு தொடர்பாகவும், டெமாசெக் தலைமை நிர்வாகி தில்ஹான் பிள்ளைக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த அவதூறுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வெட்கக்கேடானவை என்றும் அமைச்சர் சண்முகம் சாடியுள்ளார்.

ஆபத்து

சமூகப் பிளவுகளுக்கு வழிவகுக்கும் ஆபத்தான இணைய உரையாடல்கள்

இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், "இணையத்தில் எழுந்துள்ள இந்த வெறுப்பு உணர்வுகள் சிங்கப்பூரின் ஒட்டுமொத்தப் பார்வையைப் பிரதிபலிக்கவில்லை என்றாலும், இவற்றை சாதாரண ஆன்லைன் உரையாடலாகக் கடந்து செல்ல முடியாது.

இத்தகைய நடத்தைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது சமூகங்களுக்கு இடையே ஆழமான நம்பிக்கையின்மையை உருவாக்கி நம்மைப் பிரித்துவிடும்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும், அரசியல் அல்லது பொருளாதார விவாதங்களை மறைமுகக் கேடயமாகப் பயன்படுத்தி எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக வெறுப்பைப் பரப்பக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

பன்முகத்தன்மை

பன்முகத்தன்மை கொண்ட சிங்கப்பூரின் மக்கள் தொகை பின்னணி

சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில் 75% சீனர்களும், 15% மலேசியர்களும், சுமார் 9% இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.

பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க வெளிநாட்டு திறமையாளர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.

கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்று மற்றும் CECA வர்த்தக ஒப்பந்த விவாதங்களின் போதும் இதுபோன்ற இனவெறி உணர்வுகள் வெளிப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், மக்கள் இத்தகைய பிரிவினைவாதக் கருத்துகளை புறந்தள்ளி ஒற்றுமையைக் காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT