
கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ
செய்தி முன்னோட்டம்
2019ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(SFJ), கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைக் கொண்டாடி வன்முறையை ஊக்குவித்ததற்காகவும் கனடாவை விட்டு வெளியேறுமாறு இந்துக்களுக்கு அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
"இந்திய-இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேறுங்கள்; இந்தியா செல்லுங்கள். நீங்கள் இந்தியாவை ஆதரிப்பது மட்டுமல்லாமல், காலிஸ்தான் சார்பு சீக்கியர்களின் பேச்சை அடக்குவதையும் ஆதரிக்கிறீர்கள், "என்று SFJ இன் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் பன்னுன் ஒரு வீடியோவில் கூறி இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
SFJஇன் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் பன்னுன் இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒரு நபர் ஆவார்.
ஙகோ
கனடாவில் பரவும் ஹிந்துபோபியா
இந்திய-கனட இருநாட்டு உறவுகள் மோசமடைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதியை கனடாவில் வைத்து கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை கனடா நேற்று வெளியேற்றியது.
மேலும், இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியிருந்தார்.
இது நடந்த சில மணிநேரங்களில், பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தோடு, ஒரு முக்கிய கனட தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, கனேடிய இந்துக்களின் ஹார்மனி என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் விஜய் ஜெயின், பன்னூனின் அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இப்போது முழு அளவிலான ஹிந்துபோபியாவைப் பார்க்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.