Loading...
லண்டன் ஆடம்பர ஓட்டலில் சவுதி இளவரசர் பிணமாக மீட்பு! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
லண்டன் ஆடம்பர ஓட்டலில் சவுதி இளவரசர் பிணமாக மீட்பு

லண்டன் ஆடம்பர ஓட்டலில் சவுதி இளவரசர் பிணமாக மீட்பு! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
03:10 pm

செய்தி முன்னோட்டம்

சவுதி அரேபியாவை சேர்ந்த 29 வயதான இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத், லண்டனில் உள்ள ஒரு சொகுசு ஓட்டல் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான மதுபானம், போதைப்பொருள்கள் மற்றும் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று பிரிட்டன் நீதிமன்றத்தின் மரண விசாரணை முடிவில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்பு

ஓட்டல் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

இளவரசர் அப்துல்லா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் கென்சிங்டனில் உள்ள பிரபல மெரியட் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.

நவம்பர் 25 அன்று ஓட்டல் தூய்மைப் பணியாளர் ஒருவர் அறைக்குச் சென்ற போது, இளவரசர் கழிப்பறைத் தரையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

அதிர்ச்சித் தகவல்

பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நச்சுயியல் அறிக்கையின்படி, இளவரசரின் ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிகளவில் மதுபானத்தின் அளவு இருந்தது கண்டறியப்பட்டது.

இது தவிர, ஜிஹெச்பி எனப்படும் வீரியமிக்க பார்ட்டி போதைப்பொருள், கஞ்சா மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஸேனாக்ஸ் போன்ற சக்திவாய்ந்த மாத்திரைகளின் கலவையும் அவரது உடலில் இருந்தது உறுதியானது.

இந்த ஆபத்தான கலவையே அவரது மாரடைப்பிற்கு முதன்மை காரணமாக அமைந்தது.

ADVERTISEMENT

போதை மறுவாழ்வு

போதை மறுவாழ்வு மையத்தில் பெறப்பட்ட சிகிச்சைகள்

இளவரசர் அப்துல்லா ஏற்கனவே தீவிர மது மற்றும் மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாகி அதற்காக மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2025 ஆகஸ்ட் மாதத்தில் ரோஹாம்டனில் உள்ள பிரையரி கிளினிக் மற்றும் பின்னர் ரெய்ன்ஃபோர்டு ஹால் கிளினிக்கிலும் சேர்ந்து போதை மீட்புச் சிகிச்சைகளை அவர் வெற்றிகரமாக முடித்திருந்தார்.

இருப்பினும், மீண்டும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு சென்றதே இந்த துயரத்திற்கு வழிவகுத்துள்ளது.

ADVERTISEMENT

நீதிமன்றம் தீர்ப்பு

தற்செயலாக நடந்த மரணம் என நீதிமன்றம் தீர்ப்பு

இந்த மரணத்தில் பிறநபர்களின் சதிச் செயல்களோ அல்லது தற்கொலைக்கான சான்றுகளோ எதுவுமில்லை என்றும், இது தற்செயலாக அளவுக்கு அதிகமான போதைப்பொருள்களை உட்கொண்டதால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் என்றும் உதவி மரண விசாரணை அதிகாரி ஜீன் ஹார்க்கின் தீர்ப்பளித்தார்.

இதற்கிடையே, சவுதி அரேபிய அரச குடும்பம் இளவரசரின் மறைவை உறுதி செய்து, ரியாத்தில் உள்ள முக்கிய மசூதியில் அவருக்கான இறுதிப் பிரார்த்தனைகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT