மெக்காவை நோக்கி பாய்ந்த ட்ரோன் தாக்குதல்: சவுதியில் முதன்முறையாக வான்வழி எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலை சவுதி அரேபிய வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்து சுட்டு வீழ்த்தியுள்ளது. சவுதி நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 6:50 மணியளவில், மெக்காவின் தடைசெய்யப்பட்ட வான் எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சவுதி கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்க்கி அல்-மாலிகி தெரிவித்தார். 2017-ல் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் முயற்சிக்கு பிறகு, புனித நகரமான மெக்காவை இலக்கு வைத்து ஹவுதிகள் நடத்திய இரண்டாவது முயற்சி இதுவாகும்.
வான்வழி எச்சரிக்கை
சவுதியில் முதல்முறை வான்வழி எச்சரிக்கை
இத்தாக்குதல் முயற்சியை தொடர்ந்து, மெக்கா, ஜெத்தா மற்றும் தாயிஃப் ஆகிய முக்கிய நகரங்களில் வான்வழி அச்சுறுத்தல் குறித்து சவுதி சிவில் பாதுகாப்புத் துறை தற்காலிக எச்சரிக்கை மணிகளை எழுப்பியது.
நடப்பு மத்திய கிழக்குப்போர் தொடங்கியதில் இருந்து மெக்கா நகரில் இத்தகைய பாதுகாப்பு எச்சரிக்கை மணி ஒலிப்பது இதுவே முதல்முறையாகும்.
பின்னர் அச்சுறுத்தல் நீங்கியதைத் தொடர்ந்து, எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
போர்
தீவிரமடையும் ஏமன் போர் மற்றும் தாக்குதல்கள்
கடந்த சில நாட்களாக சவுதி நகரங்களை இலக்கு வைத்து ஹவுதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கமிஸ் முஷைத், அப்ஹா மற்றும் தாயிஃப் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பொதுமக்கள் காயமடைந்தனர்.
மெக்கா மீதான தாக்குதல் குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு மறுத்துள்ள போதிலும், சவுதியின் தாக்குதல்கள் தொடரும் வரை தங்களின் பதிலடித் தாக்குதல்களும் தீவிரமடையும் என அவர்களின் அரசியல் பிரிவு எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் புனிதத் தலங்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பில் எந்தவித விட்டுக் கொடுப்பும் இருக்காது என்றும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் சவுதி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.