Loading...
சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து: கொழும்பு மேற்கொண்ட ராஜதந்திர வெற்றி
சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து: கொழும்பு மேற்கொண்ட ராஜதந்திர வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
02:42 pm

செய்தி முன்னோட்டம்

சவூதி அரேபியாவில் சமூக வலைதளப் பதிவொன்றிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த இந்து புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசா என்பவரின் மரண தண்டனையைச் சவூதி உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர் ராஜதந்திர மற்றும் சட்டப்பூர்வ முயற்சிகளுக்குப் பிறகு இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 24 வயதான அனோஜன் சிவராசா, சவூதியில் பணிபுரிந்து வந்தபோது, சமூக வலைதளத்தில் நடைபெற்ற கருத்து மோதலின் போது மத ரீதியான கருத்து ஒன்றைத் தமிழில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அதனை நீக்கிவிட்டு காணொளி மூலம் மன்னிப்பும் கோரியிருந்தார். இருப்பினும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்கள் அனுப்பப்பட்டு சவூதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

சட்டப் போராட்டம்

கொழும்புவின் ராஜதந்திர மற்றும் சட்டப் போராட்டம்

ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் சிறை மற்றும் 3 மில்லியன் சவூதி ரிவால் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஷரியா சட்டத்தின் கீழ் அது மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது.

இலங்கை அரசு, அதிபர் மற்றும் வெளிநாட்டமைச்சு ஆகியவை உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த சட்டக் குழுவைச் சவூதிக்கு அனுப்பி வைத்தன.

அக்டோபர் 11 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த சவூதி உச்ச நீதிமன்றம், அக்டோபர் 13 அன்று மரண தண்டனையை ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தது.

எனினும், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், இணைய குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அசல் 5 ஆண்டு சிறைத்தண்டனை தொடருமா அல்லது முழுமையான விடுதலை கிடைக்குமா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT