சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார்
பிரிட்டிஷ் அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு, அமெரிக்காவில் நடந்த ஒரு விழாவில் அமைதியை சீர்குளித்ததற்கான வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மன்ஹாட்டனின் அப்பர் ஈஸ்ட் சைடு வக்லாவ் ஹேவல் மையம் சார்பில், இந்த விருது சல்மான் ருஷ்டிக்கு வழங்கப்பட்டது. விருது பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்வரை, அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறித்து அவரிடம் சொல்லப்படவில்லை. கடந்தாண்டு மேற்கு நியூயார்க்கில் நடந்த இலக்கிய விழாவில், சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பொதுமக்களுக்கு சொல்லப்படவில்லை. ருஷ்டி, கடந்த மாதம் ஜெர்மனி புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசைப் பெற்றிருந்ததும், தற்போது அமைதியைக் குலைத்ததற்காக பரிசைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சல்மான் ருஷ்டி?
இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் அமெரிக்க எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தற்போது வரை டஜனுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். கடந்த 1988 ஆம் ஆண்டு இவர் எழுதிய 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்ற நாவல், கடவுள் மற்றும் புனிதமான விஷயங்களுக்கு எதிராக இருந்ததால், ஈரானில் தடை செய்யப்பட்டது. மேலும் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா கொமேனி, ருஷ்டி கொல்லப்பட வேண்டுமென ஃபத்வா வெளியிட்டதை தொடர்ந்து, அவர் தலை மறைவானார். கடந்தாண்டு நியூயார்க்கில் நடந்த இலக்கிய விழாவில், ஹாதி மாதர் என்பவரால் ருஷ்டி பலமுறை குத்தப்பட்டதில், ஒரு கண் பார்வை மற்றும் ஒரு கையின் செயல்பாட்டை இழந்தார்.