சோவியத் கால அணை தகர்க்கப்பட்டது: உக்ரைனில் பெரும் வெள்ளம்
தெற்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சோவியத் கால அணை இன்று(ஜூன் 6) தகர்க்கப்பட்டது. இதனால், அந்த பகுதி முழுவதும் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது. மேலும், இந்த அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 30 மீட்டர் உயரமும், 3.2 கிமீ நீளமும் கொண்ட இந்த அணை, அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள கிரேட் சால்ட் லேக்கிற்கு சமமான தண்ணீரைக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் அணையாகும். 1956ஆம் ஆண்டு டினிப்ரோ ஆற்றின் மீது ககோவ்கா நீர்மின் நிலையத்தின் ஒரு பகுதியாக இது கட்டப்பட்டது. கிரிமியன் தீபகற்பத்திற்கும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் இந்த அணையில் இருந்து தான் தண்ணீர் வழங்கப்படுகிறது.
உக்ரைனும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்
இந்த அணை தகர்க்கப்பட்டுள்ளதால் அணு மின் நிலையத்தில் எந்த பாதுகாப்பு பிரச்னையும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை(IAEA) தெரிவித்துள்ளது. எனினும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஆலையின் தலைவர் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த சேதத்திற்கு ரஷ்யா தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய படைகள் அணையை தகர்த்துவிட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இது உக்ரைனின் சதி என்று ரஷ்யா உக்ரைன் மீது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அணைக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. மீட்பு படைகளும் தயார்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா மீதான உக்ரைனின் எதிர் தாக்குதல் எந்த அளவு பாதிக்கப்படும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.